விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது - கங்குலி
விராட் கோலி மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் விராட் கோலி மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு சிறந்த வீரராக இருந்து வருகிறார், அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் . கோலியை தொடர்ந்து தற்போதைய வரிசையில் ரிஷப் பண்ட் முக்கியமானவர். இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டால், இந்தியா தொடரை கைப்பற்றும். என தெரிவித்துள்ளார்.