சர்பராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர்


சர்பராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Sep 2024 3:14 AM GMT (Updated: 11 Sep 2024 3:49 AM GMT)

இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிக்க கே.எல். ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேசம் அதே உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிக்க கே.எல். ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இருவரில் அனுபவமிக்க கே.எல். ராகுல் வங்காளதேச டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சரியானவர் என்று இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது யூ-டியூப் பக்கத்தில் கூறியதாவது,

உண்மையில் சர்பராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் இப்படி நடக்கும். குறிப்பாக நீங்கள் நன்றாக விளையாடினாலும் சீனியர் வீரர்கள் வரும் போது உங்களுடைய இடத்தை இழப்பீர்கள். எடுத்துக்காட்டாக ரிஷப் பண்ட் வருவதால் துருவ் ஜுரேல் தம்முடைய இடத்தை இழக்கிறார்.

அதே போல கே.எல். ராகுல் வருவதால் சர்பராஸ் தம்முடைய இடத்தை இழக்கிறார். இருப்பினும் அவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் பேக்-அப் வீரர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்ததாக நியூசிலாந்து தொடரும் வருகிறது. கே.எல். ராகுல் வெளிநாடுகளில் நன்றாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் அவர் நன்றாக பேட்டிங் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story