இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை - ரோகித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் போன்ற வீரர்களின் பார்ம் குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் அனைவரும் இளம் வீரர்கள். ஒரே நிலையில் பயணிக்கிறார்கள். தங்களிடம் இருந்து அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிவார்கள். அதிகப்படியான ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.