விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் - கவுதம் கம்பீர்


விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் - கவுதம் கம்பீர்
x

கோப்புப்படம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

பெங்களூரு,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விராட் கோலியின் பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது,

விராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவர் நீண்டகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். 2008-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது என்னுடன் இணைந்து தொடக்க வீரராக இறங்கியது நினைவில் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் சாதிக்கும் வேட்கையுடன் காணப்படுகிறார்.

இந்த வேட்கை தான் அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாக்கி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிறைய ரன் குவித்து, அந்த உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆவலில் அவர் இருப்பார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்.

ஒவ்வொரு ஆட்டத்தையும் வைத்து வீரரின் திறமையை மதிப்பிடக்கூடாது. அது நியாயமானதாக இருக்காது. இது ஒரு விளையாட்டு. ஏற்றத் தாழ்வு இருக்கத் தான் செய்யும். நாங்கள் தொடர்ச்சியாக 8 டெஸ்டில் விளையாட உள்ளோம். கோலி மட்டுமல்ல, ஒவ்வொருவரும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story