இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 Dec 2024 8:26 PM IST (Updated: 23 Dec 2024 9:37 PM IST)
t-max-icont-min-icon

வினோத் காம்ப்ளி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 1983-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இருப்பினும் அவர் விளையாடிய கால கட்டங்களில் பல சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவரை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு வர, கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதற்கு காம்ப்ளி ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், உடல்நலம் பாதிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 52 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் அவர், முழுமையாக ஆபத்திலிருந்து வெளிவரவில்லை என்பதால் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே அவர் சிகிச்சை பெற்று வரும் போட்டோ மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

வினோத் காம்பிளிக்கு சிறுநீர் தொற்று பிரச்சனை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதயத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. வினோத் காம்பிளிக்கு உதவ தயார் என அண்மையில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.

வினோத் காம்ப்ளி சமீபத்தில் தனது மறைந்த பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவரின் நிலையை கண்டு ரசிகர்கள் கவலையடைந்தனர்.


Next Story