முதலில் கம்பீரை பற்றி அப்படி நினைப்பதை நிறுத்துங்கள் - சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தி


முதலில் கம்பீரை பற்றி அப்படி நினைப்பதை நிறுத்துங்கள் - சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தி
x
தினத்தந்தி 28 July 2024 8:59 AM IST (Updated: 28 July 2024 9:01 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணிக்கு பயிற்சியாளர்தான் வெற்றியை கொடுப்பார் என்று சிந்திப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக 2 கோப்பைகளை வென்று கொடுத்த அவர், இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற காரணத்தால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அந்த வகையில் புதிய பயிற்சியாளராக வந்ததும் கவுதம் கம்பீர் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமாரை தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிட்டாக இல்லை என்று சொல்லி அவரை கழற்றி விட்ட கம்பீர் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது நிறைய முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே போல இலங்கை டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் அவர் கழற்றி விட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்தான் வெற்றியை கொடுப்பார் என்று சிந்திப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். குறிப்பாக 1983, 2007, 2011, 2024 ஆகிய உலகக் கோப்பைகளில் 1983, 2007 உலகக்கோப்பைகளை இந்தியா ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர்கள் இல்லாமலேயே வென்றதாக மஞ்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே யார் பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பதை தாண்டி இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதில் தான் வெற்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கம்பீர் இந்தியாவுக்கு உடனடியாக உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று பலரும் நினைக்கின்றனர். அப்படி நினைத்து கவுதம் கம்பீரை கொண்டாடுவதை நிறுத்த வேண்டுமென்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சஞ்சய் மஞ்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "இந்தியா 1983, 2007, 2011, 2024 வருடங்களில் உலகக்கோப்பைகளை வென்றபோது பயிற்சியாளர்களாக, லால்சந்த் ராஜ்புட், கேரி கிர்ஸ்டன், ராகுல் டிராவிட் இருந்தனர். எனவே இங்கே அனைத்தும் இந்திய கிரிக்கெட்டை பொருத்ததே தவிர யார் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதை பொறுத்தது அல்ல. அதனால் இது பயிற்சியாளருக்கும் வெற்றிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நினைப்பதை நாம் நிறுத்த வேண்டிய நேரமாகும்" என்று கூறினார்.


Next Story