பீல்டிங் பயிற்சியாளர் பதவி: கம்பீர் பரிந்துரைத்த ஜான்டி ரோட்சை மறுத்த பி.சி.சி.ஐ. ...வெளியான தகவல்


பீல்டிங் பயிற்சியாளர் பதவி: கம்பீர் பரிந்துரைத்த ஜான்டி ரோட்சை மறுத்த பி.சி.சி.ஐ. ...வெளியான தகவல்
x
தினத்தந்தி 12 July 2024 12:20 PM IST (Updated: 12 July 2024 1:34 PM IST)
t-max-icont-min-icon

தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தை வழங்கியுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. அதன்பின் அவர் பணியில் தொடர அவர் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அந்த பதவியில் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட்டுடன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர். எனவே அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தை வழங்கியுள்ளது.

அதில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பவுலிங் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பரிந்துரைத்த வினய் குமாரை பி.சி.சி.ஐ. ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸை நியமிக்க கவுதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதற்கு பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விரும்புகிறது.

அத்துடன் ஏற்கனவே பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் டி திலிப் சமீபத்திய வருடங்களில் நன்றாக செயல்பட்டுள்ளார். எனவே ஜான்டி ரோட்ஸ் மகத்தான ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இந்தியரை நியமிக்க விரும்புவதால் பி.சி.சி.ஐ. தங்களின் பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப்பே தொடர விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Next Story