மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்.. விராட் கோலி செய்த செயல்.. வீடியோ வைரல்


மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்.. விராட் கோலி செய்த செயல்.. வீடியோ வைரல்
x
தினத்தந்தி 23 March 2025 4:21 AM (Updated: 23 March 2025 4:23 AM)
t-max-icont-min-icon

கொல்கத்தா - பெங்களூரு ஆட்டத்தின் இடையே விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.

கொல்கத்தா,

18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக இந்த ஆட்டத்தின் இடையே விராட் கோலியின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அத்துமீறி ஒடி வந்த அவர் விராட் கோலியின் காலின் விழுந்து வணங்கினார். அத்துடன் விராட் கோலியை கட்டியணைத்தார். பதிலுக்கு விராட் கோலியும் ரசிகரை கட்டியணைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடனடியாக விரைந்து வந்த மைதான பாதுகாவலர்கள் ரசிகரை அப்புறப்படுத்தினர்.



Next Story