வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியான பாதையில்.. - தோல்விக்குப்பின் பட்லர்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
கட்டாக்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறுகையில், "பேட்டிங்கில் நாங்கள் நல்ல இடத்தை எட்டுவதற்கான நிலையைப் பெற்றோம். ஆனால் அது போன்ற சூழ்நிலையில் எங்களில் ஒருவர் அதிரடியாக விளையாடி எங்களை 350 ரன்களுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ரோகித் சர்மாவிடமிருந்து மற்றுமொரு சிறப்பான இன்னிங்ஸ் வந்தது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதை நீண்ட காலமாக செய்து வருகிறார்.
பிட்ச்சில் பந்துகள் கொஞ்சம் வழுக்கிக் கொண்டு வந்தது. அதில் எங்களை விட எதிரணி கொஞ்சம் நன்றாக விளையாடினார்கள். நாங்கள் 330 - 350 ரன்கள் அடித்திருந்தால் அது கட்டுப்படுத்துவதற்கு நல்ல இலக்காக இருந்திருக்கக்கூடும். வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். அதில் நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டியது அவசியமாகும்" என்று கூறினார்.