கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் - ரசிகரிடம் தோனி கூறிய வார்த்தை


கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் - ரசிகரிடம் தோனி கூறிய வார்த்தை
x

image courtesy:AFP 

தினத்தந்தி 30 May 2024 11:38 AM IST (Updated: 30 May 2024 12:48 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றபோது பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு ரசிகர் ஒருவர் தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் ஓடினார்.

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து கடந்த 26-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 7 வெற்றிகளை மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

அந்த அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசன் இது என்று கூறப்பட்டு வரும் வேளையில் கோப்பையை வென்று அவரை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பை சிஎஸ்கே நழுவ விட்டது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. இருப்பினும் இந்த வருடம் எம்எஸ் தோனி விளையாடியதை பார்த்தது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக அமைந்தது.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வரும் அவருக்காக இந்தியா முழுவதிலும் சிஎஸ்கே விளையாடிய அனைத்து மைதானங்களிலும் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு 42 வயதிலும் அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்டு விருந்து படைத்தார்.

முன்னதாக மே 10-ம் தேதி அகமதாபாத் நகரில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு ஒரு ரசிகர் தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் ஓடினார். அப்போது ஆரம்பத்திலேயே கை கொடுக்காமல் ஓடிய தோனி அந்த ரசிகரிடம் கொஞ்சம் விளையாடிப் பார்த்தார். இறுதியாக தோனி நின்றதும் அவருடைய காலில் விழுந்த அந்த ரசிகர் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார். அதைத் தொடர்ந்து வழக்கம் போல மைதானம் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அன்றைய நாளில் ஏன் அதிகமாக மூச்சு வாங்கியதாக? தோனி கேட்டதாக அந்த ரசிகர் கூறியுள்ளார். அப்போது தனது மூக்கு பகுதியில் பிரச்சினை இருப்பதாக சொன்னபோது அதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய உதவுவதாக தோனி கூறியதாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "அவரைப் பார்த்ததும் நான் மகிழ்ச்சியில் கையை தூக்கினேன். அப்போது பைத்தியக்காரத்தனமாக ஓடிய நான் அவருடைய கால்களை தொட்டேன். அவர் ஒரு ஜாம்பவான். அவரைத் தொட்டதால் என் கண்கள் கலங்கின. அப்போது என்னிடம் அவர் ஏன் நீ இவ்வளவு மூச்சு வாங்குகிறாய் என்று கேட்டார். என்னுடைய மூக்கில் ஒரு பிரச்சினை இருக்கும் சூழ்நிலையில் களத்திற்குள் தாண்டி குதித்து ஓடியதால் எனக்கு மூச்சு வாங்கியது. அதை அவரிடம் சொன்னபோது, 'நான் உன்னுடைய அறுவை சிகிச்சையை பார்த்துக்கொள்கிறேன். கவலைப்படாதே உனக்கு எதுவும் ஆக விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று தோனி என்னிடம் சொன்னார்" என கூறினார்.


Next Story