கான்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலி மீது தவறு இருந்தால் ஐ.சி.சி. வழங்கும் தண்டனை என்ன..? விவரம்


கான்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலி மீது தவறு இருந்தால் ஐ.சி.சி. வழங்கும் தண்டனை என்ன..? விவரம்
x
தினத்தந்தி 26 Dec 2024 2:21 PM IST (Updated: 26 Dec 2024 3:46 PM IST)
t-max-icont-min-icon

விராட் - கான்ஸ்டாஸ் மோதல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆன சாம் கான்ஸ்டாஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.

ஆனால் அந்த இடத்தில் விராட் கோலிதான் வேண்டுமென்றே கான்ஸ்டாஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த தருணத்தை மீண்டும் பார்க்கும்போது விராட் கோலிதான் கான்ஸ்டஸ் மீது மோதியதுபோல் தெரிகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் விசாரிப்பார் என ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

ஒருவேளை அதன் முடிவில் விராட் கோலி மீது தவறு இருந்து அவர் ஐ.சி.சி.-ன் லெவல் 1 விதிமுறையை மீறியதாக இருந்தால் அபராதம் மட்டும் விதிக்கப்படும். ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 கருப்பு புள்ளிகளை (டி மெரிட்) பெற்றால் இந்தத் தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு தடை பெறவாய்ப்புள்ளது.


Next Story