சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா..? இந்திய கேப்டன் ரோகித் பதில்


சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா..? இந்திய கேப்டன் ரோகித் பதில்
x
தினத்தந்தி 6 Feb 2025 3:45 PM IST (Updated: 6 Feb 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக டி20 தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடைசி நேரத்தில் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல் போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோகித் கூறுகையில், "வருண் சக்ரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான பார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன். தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

இருப்பினும் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story