சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஒரே வழி இதுதான் - பாகிஸ்தானுக்கு அக்தர் ஆலோசனை


சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஒரே வழி இதுதான் - பாகிஸ்தானுக்கு அக்தர் ஆலோசனை
x
தினத்தந்தி 3 Dec 2024 9:44 AM IST (Updated: 3 Dec 2024 9:46 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

ஆனால் இந்தியா வந்து விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு போதுமான வருமானங்கள் கிடைக்காது. அதனால் தங்கள் நாட்டுக்கு வந்து இந்திய அணி விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. ஆனால் அதற்கு இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியா விரும்பியது போல சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய செய்திகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவை இப்படி அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் எப்போதும் சொல்லக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாறாக இந்தியாவுக்கு சென்று அவர்களை சொந்த மக்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்துவதே சரியான பதிலடியாக இருக்கும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரு தொடரை நடத்தும்போது நீங்கள் வருமானத்தைப் பெறுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு நியாயமானது. அவர்கள் தங்களுடைய நிலையில் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா வர விரும்பவில்லை என்றால் அவர்கள் வருவாயை எங்களுடன் அதிக விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நல்ல அழைப்பு.

அதே சமயம் இந்தியாவில் நாம் வருங்காலங்களில் நட்புடன் விளையாட வேண்டும். என்னுடைய நம்பிக்கை எப்போதும் என்னவெனில் இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும். இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடைபெறுவது ஏற்கனவே கையெழுத்து ஆகிவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்" என்று கூறினார்.


Next Story