சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தொடக்க விழாவை பிப்.16 அல்லது 17-ந்தேதி பிரமாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக 8 அணிகளின் கேப்டன்கள் வைத்து போட்டோவும் எடுக்க வேண்டும். ஐ.சி.சி. போட்டி நடைமுறைப்படி இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடக்க விழாவில் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.