சாம்பியன்ஸ் டிராபி தொடர்; லீக் போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார்...? - வெளியான தகவல்


சாம்பியன்ஸ் டிராபி தொடர்; லீக் போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார்...? - வெளியான தகவல்
x

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே இறுதி நாளாகும். ஆனால், இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான லீக் ஆட்டங்களில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது பும்ராவுக்கு முதுகில் வீக்கம் ஏற்பட்டது. இந்த வீக்கம் குணமாக மார்ச் முதல் வாரம் ஆகும் என கூறப்படுகிறது. அதனால் அவர் லீக் ஆட்டங்களில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

அதே சமயம், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடிப்பார் எனவும், காயம் விரைவில் குணமாகிவிட்டால் நாக் அவுட் ஆட்டங்களில் ஆவர் ஆடுவார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.


Next Story