சாம்பியன்ஸ் டிராபி: கடந்த முறை என்னால் முடியவில்லை... ஆனால் இன்று.. - ஹர்திக் பாண்ட்யா


சாம்பியன்ஸ் டிராபி: கடந்த முறை என்னால் முடியவில்லை... ஆனால் இன்று.. - ஹர்திக் பாண்ட்யா
x

image courtesy:twitter/@ICC

கடந்த சாம்பியன்ஸ் டிராபி தோல்வியை தம்மால் மறக்க முடியாது என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி நெருக்கடியில் சிக்கியபோது கே.எல்ராகுல் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி நெருக்கடியை சமாளித்ததுடன் அணிக்கும் வெற்றியை உறுதி செய்தனர்.

முன்னதாக கடந்த சாம்பியன்ஸ் டிராபி (2017- ம் ஆண்டு) தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினார். இருப்பினும் போட்டியை வென்று கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தோல்வியை தம்மால் மறக்க முடியவில்லை என்று ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசி.சி. கோப்பையை வென்றது அற்புதமான வெற்றி. கடந்த சாம்பியன்ஸ் டிராபி என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். அந்த நேரத்தில் என்னால் பினிஷிங் செய்ய முடியவில்லை. ஆனால் இன்று (அதாவது நேற்று) நாங்கள் அனைவரும் நன்றாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

புத்திசாலித்தனம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டுள்ள கே.எல். ராகுல் சரியான நேரத்தில் தனது வாய்ப்புகளை எடுத்தார். இதுதான் கே.எல். ராகுல் என்று நினைக்கிறேன். அவரிடம் அற்புதமான திறமை இருக்கிறது. அவர் பந்தை அடிக்கும் விதத்தில் வேறு யாரும் அடிக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்த போட்டி அவருடைய திறமைக்கான கண்காட்சியாக அமைந்தது" என்று கூறினார்.


Next Story