சாம்பியன்ஸ் டிராபி விவகாரம்: பாகிஸ்தானின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ஐ.சி.சி.? வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாய்,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டியது வரும் என்று ஐ.சி.சி. எச்சரித்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்ற ஒத்துக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ள பாகிஸ்தான் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஐ.சி.சி.-ன் புதிய தலைவராக கடந்த 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஜெய்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் 2027-ம் ஆண்டு வரை ஐ.சி.சி. போட்டிகள் அனைத்திலும் இதே நடைமுறையை பின்பிற்ற வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிபந்தனையை ஐ.சி.சி. உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2027-ம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் (2025-ம் ஆண்டு), 2026 டி20 உலகக்கோப்பையின் சில ஆட்டங்களும் இந்தியாவில் நடைபெற உள்ளன. அந்த தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது. தற்போது போன்று அந்த தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது குறித்து பி.சி.சி.ஐ. தரப்பில் எந்த கருத்துகளும் கூறப்படவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.