சாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..? வெளியான தகவல்
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நாளில் எந்த சுமூகமான முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது கட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்திய அணிக்குரிய போட்டிகளை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹைபிரிட் மாடல்) பாகிஸ்தான் வாரியம் நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டியது வரும் என்று ஐ.சி.சி. எச்சரித்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்ற ஒத்துக்கொண்டது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ள பாகிஸ்தான் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றை தாண்டவில்லையெனில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்றும், வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது என்றும் தங்களுக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.