ஷமி இல்லாததால் இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியுமா..? - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதில்


ஷமி இல்லாததால் இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியுமா..? - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதில்
x

image courtesy:PTI

ஷமி இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஷமி இல்லாதது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். அதே சமயம் நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று ஆஸ்திரேலியா நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முகமது ஷமி இல்லாதது கண்டிப்பாக பெரிய இழப்பு. அவருடைய இடைவிடாத இயல்பு, லைன் மற்றும் லென்த், போட்டியில் பந்தால் பேசும் விதம் போன்றவற்றை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதிகமாக பேசி கேட்டுள்ளேன். அவர் பும்ராவுக்கு நிகரான திறனை கொண்டவர். எனவே அவர் இல்லாததால் டாப் 2 பவுலிங் சேர்க்கையை இந்தியா தவற விட்டு கொஞ்சம் பின்னடைவை சந்திப்பார்கள்.

ஆனால் கடந்த முறை என்ன நடந்தது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ரிசர்வ் வீரர்களாக வந்தவர்கள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். எனவே இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது" என்று கூறினார்.


Next Story