பாக்சிங் டே டெஸ்ட்: கே.எல்.ராகுலை ஸ்லெட்ஜிங் செய்த நாதன் லயன்.. என்ன நடந்தது..?


பாக்சிங் டே டெஸ்ட்: கே.எல்.ராகுலை ஸ்லெட்ஜிங் செய்த நாதன் லயன்.. என்ன நடந்தது..?
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது போட்டியில் கே.எல்.ராகுல் 3-வது வரிசையில் களமிறங்கினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், இந்த போட்டியில் 3-வது வரிசையில் களமிறக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து கே.எல். ராகுல் 3-வது வரிசையில் களமிறங்கினார். அப்போது ஆஸ்திரேலிய வீரரான நாதன் லயன் அவரை நோக்கி, "பேட்டிங்கில் 3-வது வரிசை செல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய்?" என்று ஸ்லெட்ஜிங் செய்தார்.

முந்தைய போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியதை சுட்டிக்காட்டி அவர் கிண்டலடித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story