பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் இவர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்


பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் இவர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 21 Oct 2024 5:00 AM GMT (Updated: 21 Oct 2024 5:03 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் சர்பராஸ் கான் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சர்பராஸ் கான் விளையாடியது எனக்கு பிடித்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இப்படியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தார். பெங்களூர் மைதானத்தின் பிட்ச் இந்திய மைதானங்களை போல் செயல்படவில்லை.

கொஞ்சம் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா மைதானங்களில் பேஸ் அல்லது சீம் இல்லாமல் இருந்தால், சர்பராஸ் கான் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்வார். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் எப்போதும் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும்.

அதற்கான லெந்தில் சர்பராஸ் கான் விளையாடி தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா பவுலர்கள் மட்டும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியில் கொஞ்சம் ஷார்ட் லைனில் பந்துவீசினால், சர்பராஸ் கானால் அவர்களுக்கு தலைவலியை கொடுக்க முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவதற்கான டெக்னிக் சர்பராஸ் கானிடம் இருக்கிறது. ஏனென்றால் லைனை பார்த்து விளையாடுகிறார். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story