இந்தியாவை வீழ்த்தி என்னுடைய கெரியரில் சாதிக்காத ஒன்றை சாதிப்பேன் - கம்மின்ஸ்


இந்தியாவை வீழ்த்தி என்னுடைய கெரியரில் சாதிக்காத ஒன்றை சாதிப்பேன் - கம்மின்ஸ்
x

image courtesy: AFP

தினத்தந்தி 29 Oct 2024 9:30 PM IST (Updated: 29 Oct 2024 9:30 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்காக இம்முறை இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார். அதேபோல இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக கேப்டன் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக தமது தலைமையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதாக கம்மின்ஸ் கூறியுள்ளார். ஆனால் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை மட்டும் இதுவரை வென்றதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்தி தம்முடைய கெரியரில் சாதிக்காத பார்டர் - கவாஸ்கர் கோப்பை வெற்றியை சாதிப்பேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சந்தித்துள்ள தோல்வி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பூஸ்ட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எப்போதுமே நீங்கள் எதிர்கொள்ளும் எதிரணி அழுத்தத்தின் கீழ் இருப்பது மோசமான விஷயமல்ல. ஆனால் அவர்கள் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடி வென்றுள்ளார்கள். எனவே அவர்களை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பதே எங்களுடைய வேலையாகும். பின்னர் விஷயங்கள் எப்படி செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதே எனது கெரியரில் நிரப்ப வேண்டிய மிகப்பெரிய விஷயமாகும். குறிப்பாக சொந்த மண்ணில் அவர்களுக்கு எதிராக வெல்ல விரும்புகிறோம். நான் உட்பட பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் சொந்த மண்ணில் நன்றாக செயல்படுவதையே எதிர்பார்ப்போம். அவர்கள் எங்களுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 தொடர்களை வென்றனர். எனவே இம்முறை இது பெரிய தொடர். இம்முறை எங்களுடைய அணி நல்ல நிலையில் இருப்பதாக கருதுகிறோம். அதனால் நாங்கள் சிறப்பாக செயல்படாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை" என்று கூறினார்.


Next Story