இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டம்? வெளியான தகவல்


இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டம்? வெளியான தகவல்
x

image courtesy: PTI

இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

குறிப்பாக விராட் கோலி தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார். மேலும் இப்படிப்பட்ட பந்துகளில் அவுட்டாவதை அவர் நீண்ட காலமாக கொண்டிருக்கிறார்.

இதனால் விராட் கோலி இப்படி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுக்கும் வரை இந்திய அணியின் பயிற்சியாளர்களான கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் என்ன செய்கிறார்கள்? என்று முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக கூடுதலாக உள்ளூர் ஜாம்பவான்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பயிற்சியாளர் குழுவில் கம்பீர் (தலைமை பயிற்சியாளர்), ரையன் டென் டோஸ்கேட், அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல் மற்றும் டி.திலீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story