அஸ்வின் அந்த இந்திய முன்னாள் வீரரை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின்113 ரன்களும் ஜடேஜா 86 ரன்களும் குவித்து அசத்தினர். வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்முத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் கொஞ்சம் உயரமாக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் டெக்னிக் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமன் போல இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"அஸ்வின் முதலில் பந்தை தம்மை நோக்கி வர விடுகிறார். அவருடைய கால்களை பொறுத்த வரை அவர் அடிக்கடி எனக்கு விவிஎஸ் லட்சுமணனை நினைவுபடுத்துகிறார். ஆனால் இன்று அவருடைய டிரைவிங் திறன், ஸ்பின்னர்களுக்கு எதிராக முட்டியை மடக்கி அடிப்பது மற்றும் சிக்சர்களை விளாசுவது ஆகியவை சிறப்பாக இருந்தது.
ஜடேஜாவும் நன்றாக விளையாடினார். ஆனால் முதல் நாளில் இந்தியா மீண்டு வந்ததற்கான அதிகப்படியான பாராட்டுகள் அஸ்வினை சேரும். இப்போதெல்லாம் அஸ்வின் தன்னுடைய பேட்டிங்கில் ரன்கள் குவிப்பதை நாம் அடிக்கடி பார்ப்பது பழக்கமாக இருக்கிறது. அதே சமயம் சமீப காலங்களில் அவருடைய பேட்டிங் பார்மில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டது. அதனாலேயே அவர் பேட்டிங் வரிசையில் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அஸ்வின் ஒழுங்கமைக்கப்பட்ட வீரர். அழுத்தத்தை உள்வாங்கி விளையாடுவதே அவருடைய ஆட்டத்திற்கான அடிப்படையாக இருக்கிறது. இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பை போன்ற சமீபத்திய கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். ஆனால் கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அஸ்வின் நீண்ட நாட்கள் கழித்து வங்காளதேச தொடரில் களமிறங்கினாலும் நன்றாக விளையாடினார்" என்று கூறினார்.