ரோகித் சர்மாவை நாங்கள் வாங்க போகிறோமா..? - லக்னோ அணியின் உரிமையாளர் பதில்


ரோகித் சர்மாவை நாங்கள் வாங்க போகிறோமா..? - லக்னோ அணியின் உரிமையாளர் பதில்
x

image courtesy: AFP

தினத்தந்தி 30 Aug 2024 4:58 AM GMT (Updated: 30 Aug 2024 5:01 AM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மும்பை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை 50 கோடிகள் கொடுத்து வாங்க பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் லக்னோ அணியின் நிர்வாகம் கே.எல். ராகுலை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் என்றும் அதற்காக ரோகித் சர்மாவை எத்தனை கோடிக்கு வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா ரோகித் சர்மாவை தாங்கள் வாங்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து சில உண்மை கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரோகித் சர்மா மெகா ஏலத்தில் பங்கு பெறுவார் என்பது உங்களுக்கோ அல்லது எனக்கோ அல்லது யாருக்காவது நிச்சயமாக தெரியுமா? யாருக்கும் தெரியாது. அதனால் நாங்கள் அவரை வாங்க இருக்கிறோமா? என்ற பேச்சு தேவையற்றது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறி ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் எங்களுடைய ஏல மதிப்பின் அடிப்படையில் அவரை நாங்கள் வாங்குவோமா என்பது தெரியும். ஏனெனில் ஒரு வீரருக்காக ரூ.50 கோடியை செலவிட முடியாது.

அவருக்கு 50 சதவீத தொகையை கொடுத்து விட்டால் மற்ற 22 வீரர்களை நாங்கள் வாங்க முடியாமல் போக நேரிடும். எனவே அணியின் பர்ஸ் மதிப்பை பொறுத்துதான் எந்த ஒரு வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியும். நிச்சயம் ரோகித் சர்மா ஒரு சிறந்த வீரர், ஒரு சிறந்த கேப்டன்தான். அவரை வாங்குவது எங்களுக்கு விருப்பம்தான். ஆனாலும் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறதோ? அணிக்கு என்ன தேவையோ? அதை பொறுத்துதான் எந்த ஒரு வீரரையும் வாங்க முடியும்" என்று கூறினார்.


Next Story