பும்ரா போன்ற ஒருவர் எந்த அணிக்கு கிடைத்தாலும்.. - இங்கிலாந்து வீரர் பாராட்டு
பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார்.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். அதனால் அவரை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அணி என்று இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான். ஏனெனில் பும்ராவால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
போட்டியின் எந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் ஒரு பவுலர் என்றால் என்னை பொறுத்தவரை அது பும்ராதான். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அவரைப்போன்ற ஒரு பந்துவீச்சாளர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணிக்கு அவர் சொத்தாக மாறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக பந்துவீசும் அவர் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தற்போதே இணைந்து விட்டார்" என்று கூறினார்.