அடிலெய்டு டெஸ்ட்: மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரோகித் சர்மா?
2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை . இதனால் அந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர் .
மேலும் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் ,கே.எல். ராகுல் இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர் . இதனால் அடிலெய்டு டெஸ்ட்டில் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.