அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் உள்ளது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வினியின் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் பும்ராவின் பந்துவீச்சில் 39 ரன்களில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் 2 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 2-வது நாளின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் அடித்து அசத்தினார்.
தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் 53 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.