இது போன்ற செயல்பாடுகள் எளிதாக நடந்து விடாது - கருண் நாயருக்கு சச்சின் பாராட்டு

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கருண் நாயர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வீரரான கருண் நாயர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், மீண்டும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் கடினமான உழைப்பு மற்றும் கவனம் இல்லையெனில் ஒரே தொடரில் இவ்வளவு ரன்கள் அடிக்க முடியாது என்று அவரை ஜாம்பவான் சச்சின் மனதார பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சச்சின், "7 இன்னிங்சில் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் அடித்துள்ளது அசாதாரணமானது. இது போன்ற செயல்திறன்கள் எளிதாக நடக்காது, அவை மிகுந்த கவனம் மற்றும் கடின உழைப்பிலிருந்து வருகின்றன. தொடர்ந்து வலுவாக முன்னேறி, ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.