5-வது டெஸ்ட்: முதல் பந்திலேயே கேட்சிலிருந்து தப்பிய விராட்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த இந்திய அணி அடுத்து நடந்த பகல்-இரவு டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் மற்றும் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கே.எல் ராகுல் 4 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கில் - விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சுப்மன் கில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 57 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. விராட் கோலி 12 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது உணவு இடைவெளை விடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். போலன்ட் வீசிய பந்து விராட் கோலியின் பேட்டில் உரசி பின்னால் சென்றது. அதனை 2-வது ஸ்லீப் பகுதியில் நின்ற ஸ்டீவ் அபாரமாக பிடித்தார். இதனால் விராட் அவுட் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது சுமித் பந்தை தரையோடு பிடிப்பது தெரிந்தது. பல கோணங்களில் அலசி ஆராய்ந்த பின்னர் நடுவர் விராட் கோலிக்கு நாட் அவுட் வ்ழங்கினார். அதன் பின்னரே இந்திய அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.