இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை


இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 340 ரன்கள் முன்னிலை
x

Image Courtesy: AFP

நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 50 ரன்னுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஹாமில்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர் 50 ரன்னுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 347 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ரூட் 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து தரப்பில் டாம் லாதம், வில் யங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் டாம் லாதம் 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வில்லியம்சன் களம் இறங்கினார்.

வில் யங் - வில்லியம்சன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் வில் யங் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 50 ரன்னுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து தற்போது வரை 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story