நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280 ரன்களில் ஆல் அவுட்
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்கள் அடித்தார்.
வெலிங்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான ஜாக் கிராலி 17 ரன்களிலும், டக்கெட் ரன் எதுவுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்களிலும், ரூட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஹாரி புரூக் - ஒல்லி போப் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. சிறப்பாக விளையாடிய போப் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கிறிஸ் வோக்ஸ் கொடுத்த ஒத்துழைப்புடன் சதம் அடித்து அசத்திய ஹாரி புரூக் அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.
54.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாதன் சுமித் 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஓரூர்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தற்போது வரை 30 ரன்களுக்குள் 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.