2-வது டி20 போட்டி: துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் ஏன் இடம்பெறவில்லை..? சூர்யகுமார் விளக்கம்


2-வது டி20 போட்டி: துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் ஏன் இடம்பெறவில்லை..? சூர்யகுமார் விளக்கம்
x
தினத்தந்தி 29 July 2024 7:08 AM IST (Updated: 29 July 2024 7:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குசால் பெராரே 53 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய களமிறங்கும் தருணத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் 2-வது இன்னிங்சை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து ஆட்டம் வெகு நேரம் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 8 ஓவர்களில் 78 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 6.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 81 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 30 ரன்கள் அடித்தார்.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் 11-ல் இடம்பெறுவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அதற்கான காரணம் குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "இன்று (அதாவது நேற்று) சுப்மன் கில் கழுத்து பிடி வலியால் அவதிப்படுகிறார். எனவே அவருக்கு பதிலாக சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்" என்று கூறினார்.


Next Story