2வது டி20: பதிலடி கொடுக்குமா இந்தியா ? ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதல்
ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கிடையே முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 102 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அசத்தினர். இதன் மூலம் 13 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் , ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க இந்திய அணி முனைப்பு காட்டும் என .எதிர்பார்க்கப்படுகிறது.போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.