2-வது ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் ரோகித் சர்மா கூறியது என்ன..?
![2-வது ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் ரோகித் சர்மா கூறியது என்ன..? 2-வது ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் ரோகித் சர்மா கூறியது என்ன..?](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38609111-hitman.webp)
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
கட்டாக்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய அவர் 76 பந்துகளில் சத்தை நிறைவு செய்தார். 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் பேசுகையில், "களத்திற்கு சென்று அணிக்காக கொஞ்சம் ரன்கள் அடித்தது நன்றாக இருந்தது. நான் எப்படி பேட்டிங் செய்ய விரும்பினேனோ அப்படி செய்தேன். ஒருநாள் போட்டிகள் என்பது டி20யை விட நீளமானது டெஸ்ட் போட்டிகளை விட நீளம் குறைந்தது. அதில் கவனம் செலுத்தி முடிந்தளவுக்கு ஆழமாக பேட்டிங் செய்ய விரும்பினேன்.
கருமண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளங்களில் பந்து வழுக்கிக்கொண்டு வரும். எனவே ஆரம்பத்தில் நீங்கள் உங்களுடைய பேட்டின் முழு வேகத்தை காண்பிக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் என்னுடைய உடல் மற்றும் ஸ்டம்ப் லைனில் வீசினார்கள். எனவே இடைவெளியை கண்டு அடிப்பதே என்னுடைய திட்டமாக இருந்தது. கில், ஸ்ரேயாஸ் ஆகியோரிடம் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
நல்ல வீரரான கில் அவசரப்படாமல் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் விளையாடினார். மிடில் ஓவர்கள் முக்கியம். அங்கேதான் போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். அதை நீங்கள் பிடித்து விட்டால் டெத் ஓவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மொத்தமாக ஒரு அணியாகவும் வீரர்களாகவும் நாங்கள் முன்னேறவே விரும்புகிறோம்" என்று கூறினார்.