ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 113 ரன்கள் குவித்தார்.
புலவாயோ,
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியால் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆல் அவுட் ஆனது.
வெறும் 32.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 145 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 33 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளும், ஆகா சல்மான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் - அப்துல்லா ஷபீக் களமிறங்கினர். இதில் ஷபீக் பொறுமையாக விளையாட மறுமுனையில் சைம் அயூப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் 18.2 ஓவர்களியே விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் அடித்த பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதமடித்து அசத்திய சைம் அயூப் 113 ரன்களுடனும், ஷபீக் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.