வெறும் 73 வினாடிகளில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி முடித்த ஜடேஜா


வெறும் 73 வினாடிகளில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி முடித்த ஜடேஜா
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கட்டாக்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின்போது 24-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹாரி புரூக் அதில் ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் அந்த ஓவரை ஜடேஜா மெய்டனாக வீசினார்.

அதிலும் குறிப்பாக அந்த ஓவரை ஜடேஜா வெறும் 73 வினாடிகளில் வீசியுள்ளார். இது அரிய நிகழ்வு என்று பலரும் ஜடேஜாவை பாராட்டி வருகின்றனர்.


Next Story