மஞ்சள் காய்ச்சலை விரட்டிய வால்டர்..!
ஒரு காலத்தில் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள்.
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது என நம்பப்படுகிறது. மஞ்சள் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சில அறிகுறிகள் தோன்றும்.
உடலின் வெப்பநிலை அதிகமாகும்; குமட்டல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்றவை ஏற்படும். சில நோயாளிகளின் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் திசுக்கள் இறப்பும் ஏற்படும். தனது கொடூரமான தாக்குதல் மூலம் எல்லோரையும் நடுநடுங்க வைத்த இந்த மஞ்சள் காய்ச்சலை ஆய்வு செய்து வெற்றி கண்டவர், ராணுவ மருத்துவர் வால்டர் ரீட்.
இவர் அமெரிக்காவின் வர்ஜினியாவில் 1851-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி பிறந்தார். படிப்புதான் தனக்கு ஏணி என உணர்ந்து கவனமாகப் படித்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்து சிறப்பாகத் தேறி, அமெரிக்க ராணுவ மருத்துவராக சேவை செய்ய ஆரம்பித்தார்.
1893-ம் ஆண்டு வாஷிங்டனில் பாக்டீரியாலஜி துறையின் பேராசிரியர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 1900-ம் ஆண்டு கியூபா நாட்டின் படை வீரர்களுக்கு திடீரென மஞ்சள் காய்ச்சல் பரவி பயமுறுத்தியது. அதனால் வால்டரை கியூபாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
வால்டர் ரீட் அதன்பின் பால்டிமோர் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு பற்றியும், பாக்டீரியா பற்றியும் தீவிரமாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். எதனால் மஞ்சள் காய்ச்சல் பரவுகிறது? என்கிற தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த ஆராய்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது.
வனப் பகுதியில் வசிப்பவர்களை பெண் கொசுக்கள் கடிக்கும்போது ஆர்.என்.ஏ. வைரஸ் மனித உடலில் செல்வதால் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்குகிறது என அவர் கண்டறிந்தார். மஞ்சள் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கொசு கடிக்கும்பொழுது, அவர்களுடைய உடம்பில் இருந்து நச்சு நீரை எடுத்து மற்றவருடைய உடம்பில் செலுத்துவதனால்தான் இந்நோய் வேகமாகப் பரவுகிறது என்ற உண்மையையும் அவர் கண்டுபிடித்தார்.
விஷக் கொசுக்கள் பரவாமல் தடுப்பதன் மூலம் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்பதை உலகத்திற்கு அறிவித்தார். இந்த அரிய கண்டுபிடிப்பால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.