தமிழர்களின் தொன்மைகள் புதைந்து கிடக்கும் செம்மண் மூடிய தேரிக்காடு
தமிழகத்தின் செம்மண் வனம் என்று அழைக்கப்படும் தேரிக்காடானது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை உலகுக்கு எடுத்து செல்லும் வகையில், தேரிக்காட்டிலும் அகழாய்வு நடத்த வேண்டும்.
வேறு எங்குமே காண இயலாத வளமிக்க செம்மண் திரடுகளாலான தேரிக்காடானது சிறந்த நீர்பிடிப்பு தலமாகவும் திகழ்வதால் இங்கு ஏராளமான அரியவகை வனவிலங்குகளும், பசுமையான மரங்களும் உள்ளன. ஐவகை நிலங்களையும் உள்ளடக்கிய இப்பகுதியில் பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரிகம் புதைந்துள்ளது.
வற்றாத சுனைநீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு முதல் நாசரேத் வரையிலும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண்வனமாக காட்சியளிக்கும் தேரிக்காட்டில் பிரசித்தி பெற்ற மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன.
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலை சூழ்ந்து காணப்படும், இயற்கையிலே அமைந்த வற்றாத சுனை நீரானது தேரிக்காட்டு பகுதியை வளம் கொழிக்க வைக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தேரிக்காடு எங்கும் செந்நிறத்தில் மண்மேடுகள் சூழ்ந்தும், பனை, முந்திரி, கருவேலம் உள்ளிட்ட ஏராளமான மரங்களும், புதர் செடிகளும் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
விவசாயிகளின் அட்சயபாத்திரம்
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, குட்டம், உவரி, நவ்வலடி பகுதிகளைச் சூழ்ந்து அமையப்பெற்ற தேரிக்காட்டின் கரையோர பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் முந்திரி, முருங்கை, தென்னை மரங்களை நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் தேரிக்காட்டில் செழிப்புற்று வளர்ந்த பனை மரங்களில் இருந்து பதனீர் இறக்கி, கருப்பட்டி தயாரித்து விற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வாழ்வாதாரமான தேரிக்காடானது அட்சயபாத்திரமாக திகழ்கிறது.
தமிழகத்தின் பெருமைவாய்ந்த தேரிக்காட்டை மையப்படுத்தியும், அதனை நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்வியல்புகளை எடுத்துக்கூறும் வகையிலும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில்...
பல்வேறு இலக்கியங்களிலும், நாவல்களிலும் செம்மண்தேரி பற்றியும், அங்கு வாழும் எளிய மக்களின் வாழ்வியல் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளன. பாலை திணை பற்றி குறிப்பிடும் பாடல்களிலும் செம்மண்தேரி பற்றி எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.
'ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்தோரே ருழவன் போலப்பெருவிதுப் புற்றன்றோ னோகோ யானே' என்ற குறுந்தொகை பாடலில், செம்மண் ஈரம் காயுமுன்னர் உழுது முடிக்க துடிப்பது போல தலைவியை காண விழையும் தலைவனின் உள்ளமும் துடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மழைக்காலத்தில் செம்மண்தேரியில் சிவப்பு நிறத்தில் ஓடும் காட்டாறுகளை 'செம்புலப் பெயனீர் போல' என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அய்யனாரின் பூமி
தமிழக அரசின் புவியியல் துறையின் டுவிட்டர் பக்கத்தில் செம்மண்தேரி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், ''தமிழகத்தின் ஒரே மணல் திட்டு பாலைவனமான தேரிக்காடு முழுவதும் சிவப்பு மணல் மேடுகள் உள்ளன. அவை அருகருகே 2 இடங்களில் அமைந்துள்ளன. இங்கு நிறைய அய்யனார் கோவில்கள் உள்ளதால், இது அய்யனாரின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாமிரபரணி ஆற்றுக்கும், கருமேனியாற்றுக்கும் இடையே அமைந்த தேரிப்பகுதியானது மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கில் இருந்து தென்கிழக்காக சரிவாக உள்ளது. கடலில் சேரும் செம்மணலின் அடியில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் அங்கு அதிகளவில் மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐவகை நிலங்கள்
தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற மாவட்டமாக நெல்லை பெருமையுடன் திகழ்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமையப்பெற்ற தேரிக்காடானது ஐவகை நிலங்களையும் உள்ளடக்கிய தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது. அதாவது மலை, காடு, வயல், கடற்கரை, பாலைவனம் ஆகிய 5 வகையான நிலங்களும் தேரிக்காட்டில் பரவி கிடக்கின்றன.
பெருங்கற்கால பாறைகள்
செம்மண்ணில் அடர்ந்த மரங்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் தேரிக்காடானது பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாக, நாசரேத் திருவள்ளுவர் காலனி தேரி ஆனைக்கால் பள்ளத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறைகள் உள்ளன. மேலும் தேரியில் பல்வேறு இடங்களில் கடல் சிப்பிகள் படிந்த பாறைகளும் உள்ளன. இங்கு பழங்கால கற்கருவிகளும் கண்டறியப்பட்டன. பாறைகள் சூழ்ந்த இடம் குறிஞ்சி நிலமாக கருதப்படுகிறது.
திக்கு திசை தெரியாத அளவுக்கு அடர்ந்த வனமாக செழித்து வளர்ந்த மரங்களுடன் காணப்படும் செம்மண் பூமியை முல்லை நிலமாக கொள்ளப்படுகிறது. திசையன்விளை தேரியில் விவசாயிகள் முந்திரி, முருங்கை, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது மருத நிலமாக அறியப்படுகிறது.
உவரி, குட்டம், பெரியதாழை கடலோர கிராமங்கள் வரையிலும் பரந்து விரிந்த செம்மண் பூமி நெய்தல் நிலமாகவும், காற்றில் இடம் மாறும் நெடிய செம்மண் திரடுகள் பாலை நிலமாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு ஐவகை நிலங்களுடன் சிறப்புற்று திகழும் தேரிக்காடு நாளடைவில் வளம் குன்றி அருகி வருகிறது. இதனை பாதுகாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த கருத்துகளை பார்ப்போம்.
கடல் உள்வாங்கிய பகுதி
நாசரேத் மணிநகரைச் சேர்ந்த எழுத்தாளர் ஆறுமுகபெருமாள்:- நான் சிறுவயதில் தேரிக்காட்டில் விறகு பொறுக்கி தலைச்சுமையாக கொண்டு சென்று விற்று பிழைப்பை நடத்தி வந்தேன். அப்போது தேரிக்காட்டுக்குள் சென்று விட்டு திரும்பி வர வழி தெரியாமல் தவித்துள்ளேன். இதையடுத்து அங்குள்ள உயரமான மரத்தில் ஏறி, அங்கிருந்து நாசரேத் ஆலய கோபுரத்தை பார்த்து, அந்த வழியாக நடந்து ஊருக்கு திரும்பி வந்தேன்.
உலகில் வேறு எங்குமே காண இயலாத செழுமையான செம்மண் பாலைவனம் தென் தமிழகத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளில் செம்மண் பாலைவனமாகவே உள்ளது. ஆனால் நமது தேரிக்காடானது ஏராளமான மரங்களுடன் வளமையாக உள்ளது.
கடல் உள்வாங்கிய பகுதியே தேரிக்காடாக மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் தேரிக்காட்டில் உள்ள பாறைகளில் கடல் சிப்பிகளின் படிமங்கள் உள்ளன. இடைக்கற்காலத்தில் உருவானதாக கருதப்படும் தேரிக்காட்டில் செம்மண் 3 அடுக்குகளாக உள்ளன. இதில் மேலடுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளும், நடு அடுக்கு 5 ஆயிரம் ஆண்டுகளும், கீழடுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளும் பழமையானது. கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தேரிக்காட்டில் காற்று வீசும்போது உருவாகும் செம்மண் திரடுகள் 25 மீ. உயரம் வரையிலும் காணப்படும்.
பனை மரங்களால் பாதை
செம்மண் சூழ்ந்த தேரிக்காட்டின் அடியில் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் புதைந்து உள்ளது. தேரிக்காட்டில் சில இடங்களில் பாறைகளும், சுரங்கத்தை போன்ற கிணறுகளும் உள்ளன. பழங்காலத்தில் வீரவள நாட்டில் அமைந்திருந்த இந்த தேரிக்காட்டில் கடைசிகால பாண்டிய மன்னர்கள் இருந்து போர் புரிந்ததாகவும் கூறுகின்றனர்.
தேரிக்காட்டை ஆராய்ந்த ராபர்ட் புரூஸ் பூட், கால்டுவெல் போன்ற அறிஞர்கள், இது 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான மைக்ரோலித்திக் காலத்தைச் சேர்ந்தது என்று கூறியுள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் திக்கு திசையற்ற தேரிக்காட்டில் வழி கண்டறியும் வகையில் ஒழுகுப்பாதை அமைத்தனர்.
அதாவது நாசரேத்தில் இருந்து தேரிக்குடியிருப்பு வரையிலும் தேரிக்காட்டுக்குள் சுமார் 20 அடி அகல பாதை செல்லும் வகையில், அதன் இருபுறமும் பனை விதைகளை விதைத்து வளர்த்தனர். இதேபோன்று தேரிக்காட்டின் குறுக்காக தெற்கு-வடக்காகவும் மற்றொரு ஒழுகுப்பாதை அமைத்தனர். அதன் வழியாக தபால் சேவையும் நடைபெற்றது.
தேரிக்காட்டுக்குள் ஏராளமான பழங்கால அய்யனார் கோவில்கள் உள்ளன. அவற்றுள் பல கோவில்கள் செம்மண் மூடி மறைந்து விட்டன. எனவே தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை உலகுக்கு எடுத்து செல்லும் வகையில், தேரிக்காட்டிலும் அகழாய்வு நடத்த வேண்டும்.
அரியவகை கனிமங்கள்
தேரிக்குடியிருப்பைச் சேர்ந்த விவசாயி ராஜா:- தேரிக்காடு சிறந்த நீர் சேமிப்பு ஆதாரமாக விளங்குகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அனைத்து நீரையும் உள்வாங்கும். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல ஆண்டுகள் மழை பொய்த்தாலும் தேரிக்காடு வறட்சியை தாங்கும்.
பஞ்சு போன்ற மிருதுவான செம்மண்ணில் இல்மனைட், ஹெமாடைட், கார்னெட் போன்ற அரியவகை கனிமங்கள் உள்ளன. இவற்றை விண்வெளி ஆராய்ச்சி, அணுமின் நிலையங்களில் பயன்படுத்துவதால் விலை மதிப்புமிக்கது. எனவே தேரிக்காட்டை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
வரலாற்றுச் சுவடுகள்
சாத்தான்குளம் கலுங்குவிளையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கோபால்சாமி:- பழங்காலத்தில் பெருங்கற்கால மனிதர்கள் தேரிக்காட்டில் வாழ்ந்தனர். இதற்கு அடையாளமாக நாசரேத், மெஞ்ஞானபுரம், சாயர்புரம் பகுதிகளில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. சாத்தான்குளம் பன்னம்பாறை, மானாடு போன்ற இடங்கள் பிற்கால பாண்டியர்களின் வாழ்விடமாக இருந்தது. தொல்காப்பியரின் சீடரான பனம்பாரனாரின் பெயரே பன்னம்பாறையானது. அங்கு தரைத்தள பாறையில் பெருவழித்தடம் உள்ளது.
தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் தேரிக்காட்டில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீரை சேகரித்து, குலசேகரன்பட்டினம் ஆலைக்கு கொண்டு வந்து சீனி தயாரித்தனர். இதற்காக திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கு தனி ரெயிலே இயக்கினர். பனை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலை பொருட்கள் போன்றவற்றை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அரசுக்கும் அதிகளவில் அன்னிய செலாவணி கிடைக்கும்.
கடந்த 1798-ம் ஆண்டு சொக்கன்குடியிருப்பு செம்மண் தேரியில் புதைந்திருந்த அதிசய மணல்மாதா ஆலயம் கண்டறியப்பட்டது. தற்போது இது ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதேபோன்று எண்ணற்ற வரலாற்று சுவடுகளை தேரிக்காடு தன்னகத்தே மூடிக் கொண்டுள்ளது.
நதிநீர் இணைப்பு திட்டம்
உவரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும், எழுத்தாளருமான தாமரை செந்தூர்பாண்டி:- பூமியின் கவசமாக தேரிக்காடு திகழ்கிறது. இந்த நிலப்பரப்பு முழுவதும் விவசாயம் செய்யலாம். இங்கு பயிரிடப்படும் அனைத்து பயிர்களும் செழித்து வளரும். ஆனால் செம்மண்ணில் உள்ள கனிமங்களை பிரித்தெடுத்தால் தேரிக்காடு பாலைவனமாகி விடும். பின்னர் இங்கு புற்கள் கூட முளைக்காது. எனவே தற்காலிக லாபத்துக்காக எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சிதைத்து விடக்கூடாது.
அடி முதல் நுனி வரையிலும் பலன் தரக்கூடிய கற்பக தருவான பனை மரங்கள் தேரிக்காட்டில் நன்கு செழித்து வளரக்கூடியது. பனை மரங்களின் வேர்கள் பல அடி ஆழம் வரையிலும் சென்று நீரை உறிஞ்சும். பனையில்தான் மிகப்பெரிய பொருளாதாரம் உள்ளது. எனவே பனை தொழிலை ஊக்குவிக்கவும், பனை தொழிலாளர்களை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் செம்மண் படிந்து உருவாகிய தேரிக்காட்டை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
செம்மண் தேரியானது சிறந்த நீர்பிடிப்பு தலமாக உள்ளதால், ஆண்டுதோறும் தாமிரபரணியில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை திசையன்விளை எம்.எல். தேரியில் தேக்கும் வகையில் செயல்படுத்தப்படும் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
24 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு:- தாமிரச்சத்து மிகுந்த தாமிரபரணி ஆற்றை 'செவ்வாறு' என்றும் அழைப்பர். நெல்லை மாவட்டத்தில் பாய்ந்தோடும் ஆற்றை பெண் தாமிரபரணி என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆண் தாமிரபரணி என்றும் அழைக்கின்றனர். முன்பு தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்ட செம்மண் கடலில் பல ஆண்டுகள் படிந்ததாகவும், காலப்போக்கில் கடல் உள்வாங்கியதால் செம்மண் திரடுகள் வெளியில் தெரிவதாகவும் கூறுகின்றனர்.
திக்கு திசையற்ற தேரிக்காட்டுக்குள் செல்கிறவர்கள் திரும்பி வர வேண்டும் என்பதற்காக தேரிக்கரையோரம் உள்ள நாசரேத், ஒய்யாங்குடி, பாட்டக்கரை, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் உயரமான கோபுரம் அமைத்து, அதில் இரவில் மின்விளக்கை ஒளிரவிட்டனர். செழுமையான தேரிக்காட்டின் அருகில் கடம்பாகுளம் முதல் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலும் வரிசையாக குளங்களை அமைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.
1876-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் தேரிக்காட்டில் அகழாய்வு நடத்தினார். சாயர்புரம் முதல் திசையன்விளை வரையிலும் பரவி கிடந்த செம்மண் திரடுகளில் நடத்திய ஆய்வில் 72 பெருங்கற்கால கருவிகளை கண்டெடுத்தார். அவைகள் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். தேரிக்காட்டில் சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
தேரிக்காட்டை ஆராய்ச்சி செய்த உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பீர்பால் அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மொர்க்கதாய், இது 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது என்று கூறினார். ஆதிச்சநல்லூருக்கும் தேரிக்காட்டுக்கும் தொடர்பு உள்ளது. செம்மண் மூடிய தேரிக்காட்டில் தமிழர்களின் தொன்மைவாய்ந்த நாகரிகம் புதைந்துள்ளது. எனவே தேரிக்காட்டில் அகழாய்வை மேற்கொண்டு தமிழர்களின் தொன்மைவாய்ந்த நாகரிகத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மர்மதேசம்
தேரிக்காட்டில் காற்று வீசும் திசைக்கு ஏற்ப அடிக்கடி செம்மண் திரடுகள் இடம் மாறுகிறது. இதனால் அங்கு செல்கிறவர்கள் திரும்பி வருவதற்கான பாதையை மறக்கடித்து விடுகிறது. தென்மேற்கு பருவமழை காலங்களில் சூறைக்காற்றுடன் செம்புயலாக வீசும்போது செம்மண் திரடுகள் பெருமளவில் இடம் மாறுகிறது.
பெரிய மரங்களையும் கூட செம்மண் திரடுகள் மூடி விடுவதால், அங்கு செல்கிறவர்கள் பாதை தெரியாமல் பல நாட்கள் சுற்றி திரிந்து தவித்துள்ளனர். இதனால் இந்த பாலைவனம் மர்மதேசமாக விளங்குகிறது. எனவே, புதிதாக தேரிக்காட்டுக்கு செல்கிறவர்களை அதிக தூரம் செல்லாமல் திரும்பி வந்து விடுமாறு உள்ளூர் மக்கள் எச்சரிக்கின்றனர்.
சினிமாப் படமான செம்மண்வனம்
இயற்கை எழில் கொஞ்சும் செம்மண் வனமான தேரிக்காட்டில் எண்ணற்ற திரைப்படங்களும் படமாக்கப்பட்டன. கடந்த 1991-ம் ஆண்டு நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கிழக்கு கரை' திரைப்படத்தின் பெரும்பகுதி மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலைச் சுற்றியே படமாக்கினர். அங்குள்ள வற்றாத சுனைநீரும் பல்வேறு காட்சிகளில் இடம் பெற்றன.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வாலியின் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மக்களின் மனதை கவர்ந்தது. இதில் 'சிலுசிலுவென காற்று' என்ற பாடலானது செம்மண் தேரி, சுனைநீரின் அழகினை முழுமையாக படம் பிடித்துக் காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. தொடர்ந்து செம்மண் தேரிக்காட்டில் பல்வேறு படப்பிடிப்புகளும் நடைபெற்றன.
இயக்குனர் ஹரி
தேரிக்கரையான நாசரேத் கச்சனாவிளையைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஹரி தனது படங்களில் முக்கிய காட்சிகளை தேரிக்காட்டில் படமாக்கி வெற்றி கண்டார்.
அதில் 2005-ம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தில் 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்ற பாடலும், 2007-ம் ஆண்டு வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும், 2010-ம் ஆண்டு வெளியான சிங்கம் படத்தின் ஆரம்ப சண்டைக்காட்சியும் தேரிக்காட்டில் படமாக்கப்பட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணியின் வெக்கை நாவலை தழுவி, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தின் இடைவேளை சண்டைக்காட்சியை புழுதி பறக்கும் செம்மண் தேரியில் படமாக்கினர். இந்த படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு தேசிய விருது கிடைத்தது. இதே திரைப்படத்தை தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 'நாரப்பா' என்று 2021-ம் ஆண்டு வெளியிட்டும் வெற்றி கண்டனர். இதன் படிப்பிடிப்பும் அதே தேரிக்காட்டில்தான் நடத்தினர்.