களம் தயாராகிறது


களம் தயாராகிறது
x

வெற்றி...

இதை பெறுவதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தனது பலத்தை-செல்வாக்கை-திறமையை காட்டி பெறுவது; மற்றொன்று எதிரியின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பெறுவது.

அரசியலில் பெரும்பாலும் 2-வது வகை வெற்றியைத்தான் கட்சிகள் ருசிக்கின்றன. மாநிலங்களிலோ அல்லது தேசிய அளவிலோ ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அதற்கான காரணத்தை உற்று நோக்கினால், ஆளும் கட்சி செய்த தவறுகளும், அதை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்தி இருப்பதும் தெரியவரும்.

மோடி...

இந்த பிரம்மச்சாரி அரசியல் தலைவரை மையப்படுத்தியே கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற பெருமையும், செல்வாக்கும் பெற்று விளங்கிய காங்கிரஸ் பேரியக்கத்தை 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரியணையில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் மோடி அமர்ந்த போது அவர் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி தேசிய தலைவர் ஆனார். அதுமட்டுமின்றி, "யார் இந்த மனிதர்?" என்று உலகமே அவரை உற்று நோக்கியது. 5 ஆண்டுகள் ஆட்சி ரதத்தை சிறப்பாக ஓட்டி சாதித்து காட்டிய அவர், 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். முந்தைய தேர்தலை விட இந்த முறை அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூடுதல் பலத்துடன் ஆட்சி அமைத்தது.

இப்படி தொடர்ந்து 10 ஆண்டுகளான ஆட்சிக்கவிழ்ப்பு பயம் இன்றி-உள்ளடி வேலை அச்சமின்றி-கூட்டணி கட்சிகளின் குடைச்சல் இன்றி சுதந்திரமாக பணியாற்றும் பிரதமர் மோடியை, அந்த பதவியில் இருந்து அப்புறப்படுத்துவது எப்படி? என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன. அவரது அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், அதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், களம் தயாராகி வருகிறது.

கடந்த தேர்தலின் போது, மோடியை இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஒருமித்த கருத்து இருந்தாலும், அவர்களால் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாக நின்று அவரை எதிர்க்க முடியவில்லை. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யாரையும் பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டாமல் களம் இறக்கியது.

இந்த இரு அணிகளுக்கும் எதிராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து 'மகாபந்தன்' என்ற கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. இந்த மூன்றாவது அணிக்கு கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மும்முனை போட்டி நிலவிய அந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகள், குறிப்பாக பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கணிசமாக பிரிந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த பலவீனம் மோடிக்கு சாதகமாக அமைந்தது.

இதனால் பாரதீய ஜனதா கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதன் மூலம் சுதந்திரத்துக்கு பின் தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற பெருமை பாரதீய ஜனதாவுக்கு கிடைத்தது.

தனிப்பட்ட முறையில் பாரதீய ஜனதாவுக்கு மட்டும், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்கள் கிடைத்தன. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அந்த கட்சி இந்த தேர்தலில் கூடுதலாக 21 இடங்களை அள்ளியது. கிராமப்புறங்களை விட நகர்ப்புற தொகுதிகளிலேயே பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக்கொண்டார் மோடி.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 91 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் 52. 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களை பெற்று படுதோல்வி அடைந்த காங்கிரசுக்கு இந்த தேர்தலில் கூடுதலாக 8 இடங்கள் கிடைத்தது சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. இந்த அணியில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக தி.மு.க.வுக்கு 24 இடங்கள் (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் சேர்த்து) கிடைத்தன.

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக 37.36 சதவீத வாக்குகளை பாரதீய ஜனதா பெற்றது. இது 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை (31.34 சதவீதம்) விட 6.02 சதவீதம் அதிகம் ஆகும்.

காங்கிரசுக்கு 19.49 சதவீத வாக்குகள் கிடைத்தன. முந்தைய தேர்தலிலும் இதே சதவீத வாக்குகளைத்தான் அந்த அணி பெற்றது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காத விரும்பாதவர்களின் (நோட்டா) சதவீதம் 1.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த தேர்தலில் 1.04 சதவீதமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகாரில் 2.8 சதவீத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்.

கடந்த முறை வலுவான கூட்டணி அமையாமல் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறியதால்தான் மோடி மீண்டும் பதவிக்கு வர முடிந்தது என நம்பும் எதிர்க்கட்சிகள், மறுபடியும் அப்படியொரு தவறு நடந்துவிடக்கூடாது என்பதில் இப்போது உறுதியாக இருக்கின்றன. இந்த முறை ஓர் அணியாக நின்று எப்படியாவது மோடியை வீழ்த்தியே தீரவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் மிகவும் தெளிவாக உள்ளன.

இதனால் பாரதீய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதாதளம்) டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் முதல் வேலையாக கூட்டணியின் பெயரை மாற்றினார்கள்.

அதாவது தங்கள் அணிக்கு "இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி" என்று பொருள்படும் வகையில் 'இந்தியா' என்று பெயர் வைத்தார்கள். எப்படியோ மூளையை கசக்கி தேசத்தின் பெயரையே கூட்டணிக்கு பெயராக வைத்து இருக்கிறார்கள்.

பிரசாரம், தேர்தல் வாக்குறுதி போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய எல்லா தலைவர்களுமே மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை சாடியதோடு, கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாவது கூட்டத்தை மராட்டிய தலைநகர் மும்பையில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்து இருந்தனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட சில தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் இந்த கூட்டம் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இப்போது எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவின் தலைவருமான உத்தவ் தாக்கரே, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் ஒரு காலத்தில் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து செயல்பட்டவர்கள்தான்.

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்திய அதே சமயத்தில், தங்கள் அணியின் ஒற்றுமையை காட்டுவதற்காக பிரதமர் மோடி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க., சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் பிரிவு) ராஷ்டிரீய லோக் ஜனசக்தி உள்ளிட்ட 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மோடியிடம் இருந்து பிரதமர் நாற்காலியை பறிப்பது என்பது எப்படி எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டமாக இருக்கிறதோ, அதேபோல் அவரை மீண்டும் அதே நாற்காலியில் அமர வைப்பதுதான் பாரதீய ஜனதா கூட்டணியின் ஒரே செயல்திட்டமாக இருக்கிறது. மொத்தத்தில் வருகிற தேர்தலிலும் மோடிதான் கதாநாயகன்.

கடந்த இரு தேர்தல்களில் மோடியை முன்னிறுத்தி வெற்றி பெற்றதை போலவே நடைபெற இருக்கும் தேர்தலிலும் அவரது தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் இறங்குகிறது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் என்னதான் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், தனிப்பட்ட முறையில் மோடியைத்தான் மலைபோல் நம்பி இருக்கிறது அந்த கூட்டணி.


2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட சில ஊழல் புகார்களை பாரதீய ஜனதா கையில் எடுத்ததோடு, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமைப்பண்பு மற்றும் அதிரடி திட்டங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை கைகொடுத்ததால் பாரதீய ஜனதா இரண்டாவது முறையாக அரியணை ஏறியது.

இந்த முறை மோடியின் கைகளில்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்-வேகமாக முன்னேறும்-பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டார் ஆகிய கோஷங்களை முன்வைத்தும், அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சி திட்டங்களை எடுத்துச்சொல்லியும் இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் தீர்மானித்து உள்ளன.

அதேசமயம், பாரதீய ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளின் கைவசமும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள், அவர் பெரிய தொழில் அதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சாடுகிறார்கள். என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த ஊழல் புகாரையும் சுமத்த முடியவில்லை. மாநில உரிமை பறிப்பு குற்றச்சாட்டு சாமானிய வாக்காளனிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து இருக்கிறது. இந்த விலை உயர்வு பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆயுதமாக கையில் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் பாரதீய ஜனதா அரசு மீது எதிர்க்கட்சிகள் சுமத்தும் மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டு, மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது. இது காலம் காலமாக எதிர்க்கட்சிகள் தங்களை நோக்கி வீசும் கணை என்பதால் பாரதீய ஜனதா அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்வது இல்லை. என்றாலும் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டத்தை பாரதீய ஜனதா தற்போது கிடப்பில் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் அங்கு பாரதீய ஜனதா செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. தேர்தலின் போது இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் நிச்சயம் கையில் எடுக்கும் என்பதால், வடகிழக்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம். (இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வருகிற 8-ந் தேதி முதல் 3 நாட்கள் விவாதம் நடைபெற இருக்கிறது.)

இந்த தேர்தலிலும் பாரதீய ஜனதா கூட்டணி மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் நிலையில், எதிர்க்கட்சிகளிடையே பிரதமர் பதவி தொடர்பாக இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. ராகுல் காந்தியை முன்னிறுத்தலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் விரும்பியபோதிலும் மம்தா பானர்ஜி, சரத்பவார், நிதிஷ்குமார் உள்ளிட்ட பெரும்பாலானோர் அதற்கு 'ரெட் சிக்னல்' காட்டுகிறார்கள். இதனால் தங்கள் அணி வெற்றி பெற்றால், பின்னர் கலந்து ஆலோசித்து தங்களில் ஒருவரை பிரதமராக தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் 'இந்தியா கூட்டணி' தலைவர்கள் இருக்கிறார்கள்.

பிரதமர் பதவியின் மீது காங்கிரசுக்கு ஆசை இல்லை என்றும், பாரதீய ஜனதாவின் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதுதான் தங்களின் ஒரே நோக்கம் என்றும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் கூறினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கூறி இருக்கிறார்.

கார்கேயானாலும் சரி;... மம்தா பானர்ஜியானாலும் சரி... தேர்தலுக்கு முன் கூட்டணி தலைவர்கள் எல்லோருமே இப்படித்தான் சொல்வார்கள். தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கும் போது, பிரதமர் பதவி எங்களுக்குத்தான் வேண்டும் என்று கேட்டு இப்போதே யாராவது கூட்டை கலைப்பார்களா என்ன? 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் போதுதான் கட்சிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.



பாலை மறுக்கும் பூனையும், பதவியை வெறுக்கும் அரசியல்வாதியும் இருக்கிறார்களா என்ன?...

இப்போதுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தாங்கள் கூடுதல் இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். ஏனெனில் கிடைக்கும் இடங்களை பொறுத்துத்தான் கட்சிகளின் கை ஓங்கும்; பேரமும் வலுவாக அமையும்.

'இந்தியா' கூட்டணியில் தேசிய அளவில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.க.வும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும் வலுவாக உள்ளன. பொதுவாக மாநில கட்சிகள் தங்கள் மாநிலங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பும் என்பதால் அங்கு காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும். எனவே தேசிய அளவில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு பிரதமர் பதவிக்கு போட்டி வரும் போதுதான் காங்கிரசுக்கு தெரியும்.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் இருப்பதால் அரசியல் சூழ்நிலையிலும், கட்சிகளின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வெற்றி பெற்றுக்கொள்ள ; தோல்வி கற்றுக்கொள்ள என்று சொல்வார்கள்.

கடந்த இரு தேர்தல்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள பாரதீய ஜனதா என்னென்ன யுக்திகளை வகுக்கப்போகிறது? என்பது இனி வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.

அதேபோல் இரு தேர்தல்களில் பெற்ற தோல்வியின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் என்னென்ன திட்டங்களை வகுக்கப்போகிறார்கள்? தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் எப்படி அனுசரித்து செல்லப்போகிறார்கள் என்பதும் வரும் நாட்களில் தெரிந்துவிடும். மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வரிந்து கட்டினாலும் அவற்றுக்கிடையே கொள்கை வேறுபாடுகளும், பிரச்சினைகளை கையாளுவதில் மாறுபட்ட அணுகுமுறைகளும் இருப்பதை மறுக்க முடியாது. இந்த விஷத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சென்றால்தான் கூட்டணி கரை சேரும்.

அரசியல் சதுரங்கத்தில் வெற்றி பெற சுயகவுரவத்தை விட கூட்டு முயற்சி மிகவும் முக்கியம் என்பது அரசியல்வாதிகளுக்கு தெரியாதா என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்...


மதில் மேல் பூனைகள்



தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா கூட்டணியில் பெரியதும், சிறியதுமாக 39 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் 26 கட்சிகளும் உள்ளன.

ஆனால் இந்த இரு கூட்டணிகளிலும் இடம் பெறாமல் 11 கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த பட்டியலில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய லோக் தந்திரிக் கட்சி, அகாலிதளம், அகாலிதளம் (மான் பிரிவு), அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் 91 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், ஒடிசாவில் பிஜு ஜனதாதளமும் அதிக இடங்களை கைப்பற்றின. டெல்லியில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'டெல்லி நிர்வாக அதிகார மசோதா'வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், பிஜு ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் அதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, அக்கட்சிகள் பாரதீய ஜனதாவுடன் நெருங்கி வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்எதிர் துருவங்களாக இருந்து வருவதால், தேர்தலின்போது அந்த இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை.

ஒடிசாவில் கடந்த 23 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்து வரும் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக்குக்கு, மத்திய அரசின் திட்டங்களை தங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற பாரதீய ஜனதா அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற ஆதங்கம் இருப்பதையும் மறுக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பாரதீய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்திரசேகர ராவ், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டு தற்போது அமைதியாக இருந்து வருகிறார். பாரதீய ஜனதாவை கடுமையாக எதிர்த்த போதிலும், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்காததால், அவர் ஏதோ பெரிய திட்டத்துடன் காத்திருப்பதாக தெரிகிறது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி., தனது கட்சியை தீண்டத்தகாததாக கருதி எதிர்க்கட்சிகள் உதாசீனப்படுத்துவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதேபோல் எதிர்க்கட்சிகள் அணியில் சேராமல் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தனித்து போட்டியிடப்போவதாக கூறி இருக்கிறார்.

இப்போதைக்கு மதில் மேல் பூனையாக இருக்கும் இந்த கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது, எந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி கிடைக்கும்? யார் அதிக தொகுதிகள் ஒதுக்குவார்கள்? என்பதை பொறுத்து ஏதாவது ஒரு பக்கம் தாவக்கூடும்.

எந்த பேரமும் சரியாக படியாத பட்சத்தில் இவற்றில் சில கட்சிகள் தனித்து களம் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.


Next Story