நகர்ப்புற வாசிகளின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய மாடித்தோட்டம் நல்ல தீர்வு
மாடித்தோட்டம் மூலம் தேவையான காய்கறியை வீட்டிலேயே பயிரிட்டு பெற முடியும்.
தக்காளி, வெங்காயம் விலை உயர்வு மத்திய-மாநில அரசுகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை-எளிய, நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை இந்த விலை உயர்வு தகர்த்தெறிந்துள்ளது. தக்காளி விலை உயர்வை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் பறக்கின்றன. இதுமட்டுமல்லாமல், தக்காளி பயிரிடப்பட்டு இருக்கும் இடங்களில் திருடும் சம்பவங்களும், அதை பாதுகாப்பவர்களை, விற்பனை செய்பவர்களை தாக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் தக்காளி விலை உயர்ந்து கொண்டேதான் போகிறது. நேற்று கூட சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.130 வரையிலும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.90 முதல் ரூ.150 வரையிலும் விற்கப்பட்டது. அதேபோல் சின்ன வெங்காயம் ரூ.140 முதல் ரூ.160 வரையில் கோயம்பேடு மார்க்கெட்டிலும், சில்லரை கடைகளில் ரூ.160 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மாடித் தோட்டம்
இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா? அதற்கு மாற்று தீர்வு என்ன தான் இருக்கிறது? என்ற யோசனையில் சென்னைவாசிகள் உள்பட பலரும் இருந்து வருகின்றனர். இதற்கு மாடித்தோட்டம் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும் என அதில் பழக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நகர்ப்புற விவசாயம் என்றும் அழைக்கின்றனர்.
'நம் தேவையை நாமே பூர்த்தி செய்து கொண்டால், எதற்காக நாம் வெளிப்பொருட்களை நாட வேண்டும்' என கூறும் அவர்கள், தக்காளி மட்டுமல்ல, சமையலுக்கு தேவையான முக்கிய காய்கறியையும் மாடித்தோட்டம் மூலம் விளைவிக்க முடியும் என்கிறார்கள். சொந்த வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த மாடித்தோட்டம் சாத்தியப்படும் என்றாலும், வாடகை வீட்டில் உரிமையாளரின் அனுமதியுடனும் மாடித்தோட்டம் அமைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
சென்னை உள்பட நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் பலரும் இந்த மாடித்தோட்டத்தை அமைக்க விரும்புகின்றனர். அதிலும் சென்னையில் 83 சதவீதம் பேர் மாடித்தோட்டத்தை பராமரிக்க விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
காய்கறி, பழங்கள்
இந்த யோசனை வெளிநாடுகளில் கூட நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலர், அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, உள்ளூர் இந்திய கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்களின் விதைகளை எடுத்து, பராமரித்து, அதனை நட்டு, பயிரிடுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் காய்கறி, பழங்களை பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். அதேபோல் கியூபாவிலும் நகர்ப்புற விவசாயம் பிரபலமாக உள்ளது.
அதிலும் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு பிறகு, மாடித் தோட்டத்தை எவ்வாறு அமைப்பது? அதில் எவ்வாறு காய்கறி வகைகளை பயிரிடுவது? என்பதை நகர்ப்புற வாசிகள் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் தேடி, அதனை பின்பற்றி மாடித் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாடித்தோட்டம், சென்னையின் காலசூழ்நிலையை சமாளிக்கும் நல்ல குளிர்ச்சியை தருவதோடு, விளைவித்த காய்கறியையும் உற்பத்தி செய்து பயன் பெற முடியும். வீடுகளில் மட்டுமல்ல ஓட்டல்கள் மற்றும் பெரிய இடங்களை கொண்ட நிறுவனங்களும் இதுபோன்ற தோட்டங்களை அமைத்து பயன்பெறலாம்.
விலைவாசியை கட்டுப்படுத்த முடியும்
அந்தவகையில் மாடித் தோட்டம் அமைத்து காய்கறி விளைச்சலை பெற்று வரும் சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த மைத்ரேயன் கூறுகையில், 'மாடித் தோட்டம் அமைப்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் ஆர்வமும், பராமரிப்பும் இருந்தால் இந்த சவால் நிறைந்த பணியை எளிதில் செய்துவிடலாம். மாடித்தோட்டம் மூலம் விலை வாசியை கட்டுப்படுத்த முடியும். அவரவருக்கு தேவையான காய்கறியை வீட்டிலேயே பயிரிட்டு பெற முடியும். நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 2 ஆயிரம் சதுர அடி மாடி பரப்பில் தோட்டம் அமைத்திருக்கிறேன். மாடித்தோட்டம் அமைப்பது மூலம் காய்கறி வகைகளில் 60 முதல் 70 சதவீத தேவைகளை நாம் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இயற்கை முறையில் விளைவிக்கும் உணவு பொருட்களை நேசிப்பவர்கள் மாடித்தோட்டம் அமைக்கலாம். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு விவசாயிகள் விவசாயம் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு உணவு பொருட்களை கொடுக்கிறார்கள்? என்பதை இதன் மூலம் நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். இப்போது மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு வந்துவிட்டது' என்றார்.
காய்கறி கடைக்கு சென்றது இல்லை
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜெயமங்கள் என்ற பெண் கூறும்போது, 'நான் என்னுடைய வீட்டின் மாடியில் 580 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறேன். தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், அவரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், நார்த்தங்காய் என சொல்லிக்கொண்டே போகலாம். இதுதவிர கீரை வகைகளும் விளைவிக்கிறேன். கிழங்கு வகைகளை தவிர, மற்ற காய்கறிக்காக நான் கடைக்கு சென்றதே கிடையாது. நாம் மாடித் தோட்டம் அமைப்பதால், காய்கறி வகைகளில் விலைவாசி உயர்வு வரும்போது கவலைப்பட தேவையில்லை. வீட்டுக்கு தேவையான காய்கறியை செழிப்பாக எடுத்து ருசியாக சமைத்து சாப்பிடலாம்' என்றார்.
அந்த வகையில் நகர்ப்புற வாசிகளுக்கு தக்காளி உள்பட அனைத்து காய்கறி வகைகளின் தேவையையும் பூர்த்தி செய்ய மாடித் தோட்டம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதே மாடித்தோட்டம் அமைத்து பலன் பெற்று வருபவர்களின் சொல்லாக இருந்து வருகிறது.