மண் ஆய்வுக்கு மாதிரி எடுப்பது எப்படி?
பயிர் வளர்ச்சி, மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரம் போன்றவற்றை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.மண்ணின் தன்மை அவற்றுள் முக்கியமான ஒன்று. மண் ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.
மண்ணின் தன்மை
மண் என்பதை பொறுத்த அளவில் அதன் உவர்த்தன்மை, களர் மற்றும் அமில நிலை, சுண்ணாம்பு அளவு, மண் நயம், மண் கண்ட ஆழம் ஆகியவை முக்கியமான தன்மைகள் ஆகும்.
இந்த தன்மைகளை அறியாமல் பயிர் செய்வதும், உரமிடுவதும் தவறானது. மண்ணின் தன்மையை ஆய்வுகள் மூலம் அறிந்து குறைகள் இருந்தால் பரிந்துரைப்படி சீர்செய்து பிறகு பயிர் செய்ய வேண்டும்.
பயிர் வளர்ச்சிக்கு பேரூட்டசத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, 2-ம் நிலை சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், கந்தகம், நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், போரான், மாங்கனீசு, குளோரின் ஆகியவை தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மண்ணிலும் அதன் இயல்புக்கு ஏற்றவாறு இந்த சத்துக்கள் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். மண் ஆய்வில் இதனை தெரிந்து கொண்டு பயிருக்கு ஏற்றவாறு உரங்களை இட முடியும்.
மண் மாதிரிகள்
நிலத்தின் மண்ணை ஆய்வு செய்ய மண்ணை சேகரிக்கும் போது பயிருக்கு ஏற்றவாறு மாதிரி எடுக்கும் ஆழம் மாறுபடும். நெல் மற்றும் சிறுதானியங்களுக்கு அரை அடி ஆழமும், கரும்பு, வாழை, பருத்தி, காய்கறி பயிர்களுக்கு முக்கால் அடி ஆழமும், தென்னைக்கு 3 அடி ஆழமும் தோண்டி மண்ணை எடுக்க வேண்டும்.
பழப்பயிர்கள் மற்றும் மரப்பயிர்களுக்கு 6 அடி மண் கண்டக் குழிகள் அமைத்து அதன்படி மண் மாதிரி சேகரிக்க வேண்டும். மண் சேகரிக்கும் போது ஒவ்வொரு வயலிலும் தனித்தனியாக மண் மாதிரி சேகரிக்க வேண்டும். அதை பாலித்தீன் பையில் போட்டு அதனுள் அந்த மண் எடுக்கப்பட்ட நிலம் பற்றிய விவரத்தை ஒரு அட்டையில் எழுதி உள்ளே போட வேண்டும்.
அதாவது, உழவரின் பெயர், முகவரி, சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிர், தற்போது சாகுபடி செய்யப் போகும் பயிர், மானாவாரி, இறவை போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். பின்னர் இந்த மண் மாதிரியை அருகில் உள்ள மண் பரிசோதனை நிலையத்திற்கு எடுத்து சென்று ஆய்வுக்காக தர வேண்டும்.
முடிவுகள்
மண் பரிசோதனை அலுவலர்கள் அதனை ஆய்வு செய்து அந்த மண்ணில் உள்ள சத்துக்கள், குறைபாடுகள் மற்றும் மண்ணை சீர் செய்ய எந்த மாதிரியான உரங்களை இட வேண்டும் என்று உரப்பரிந்துரையை தருவார்கள்.
உரச்செலவை குறைப்பதற்கும், மண் வளத்தை காப்பதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் மண் ஆய்வு முக்கியமானது. எனவே, விவசாயிகள் மண் ஆய்வு செய்து தங்கள் நிலத்தின் இயல்பை தெரிந்து கொண்டு பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம்.
உவர், களர் நிலங்களை சீர்திருத்தும் வழிகள்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் போதிய அளவில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிர்களின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இந்த நிலையானது, மண்ணில் உள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களாலும் ஏற்படலாம்.
எனவே வயலை சமன் செய்து பின்பு வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்க வேண்டும். பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.
மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும்போது களர் நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக மாறி நீரில் கரையும் உப்பாக வெளியேற்றப்படுகிறது. இதுபோல் பல முறை நீர் விட்டு கலக்கி, பின்னர் வடிய வைப்பதால் இந்த குறைபாட்டில் இருந்து மண்ணுக்கு நிவர்த்தி கிடைக்கிறது.