குப்பை மேடான எவரெஸ்ட் சிகரம்


குப்பை மேடான எவரெஸ்ட் சிகரம்
x

இமயமலை...

நம் நாட்டின் வட எல்லையில் பாதுகாப்பு அரண் போல் அமைந்திருக்கும் இந்த மலை வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்காக பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூடான், சீனா என 5 நாடுகளில் 2,400 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு கிடக்கிறது. இந்த மலை பல தொடர்களாக இருப்பதால் இதன் அகலம் 150 கி.மீ. முதல் 350 கி.மீ. வரை உள்ளது. அதாவது குறைந்தபட்ச அகலம் நெல்லையில் இருந்து மதுரை வரையும், அதிகபட்ச அகலம் திருச்சியில் இருந்து சென்னை வரையும் இருக்கும்.

பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக நிலப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலை உருவானதாகவும், இந்த மாற்றம் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் எனவும் பூகோளவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த மலையில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் முக்கியமானது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்பது நாம் அறிந்ததே. அதாவது இந்த பூமியிலேயே உயரமான இடம் எவரெஸ்ட்தான். இந்த சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 9 கி.மீ. உயரம்.

பலர் நினைப்பது போல் எவரெஸ்ட் சிகரம் இந்தியாவில் இல்லை. நேபாளம்-சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையில் இமயமலையின் ஓர் அங்கமான மஹாலங்கூர் மலைத்தொடரில் இந்த சிகரம் உள்ளது. நேபாள நாட்டின் கோஷி மாகாணத்தின் சோலுகொம்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிகரத்தை நேபாளிகள் 'சாகர்மாதா' என்றும், திபெத்தியர்கள் 'புனித தாய்' என்றும், சீனர்கள் சோமோலுங்குமா என்றும் அழைக்கிறார்கள். இந்த சிகரத்தின் தென்பகுதி நேபாளத்துக்கும், வட பகுதி சீனாவுக்கும் சொந்தம்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1830 முதல் 1843-ம் ஆண்டு வரை இந்தியாவில் சர்வேயர் ஜெனரலாக பணியாற்றிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் நினைவாக இந்த சிகரத்துக்கு எவரெஸ்ட் என பெயர் சூட்டப்பட்டது. மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் எப்போதும் பனிப்பாறைகளால் மூடப்பட்டு இருக்கும். வெள்ளியை உருக்கி கட்டிகளாக அடுக்கி வைத்தது போல், எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகளாகவே காட்சி அளிக்கும்.

எவரெஸ்ட் சிகரத்தை முறைப்படி அளவிட்டு அதன் சரியான உயரத்தை கண்டறியும் வரை, அதை 'சிகரம்-15' என்ற பெயரில்தான் அழைத்து வந்தனர். ராதாநாத் சிக்தார் என்ற இந்தியர் 1852-ம் ஆண்டு இதன் உயரம் 8,848.86 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அதாவது சிகரத்தில் இருந்து சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்தபடி, நில அளவைக்கு பயன்படும் 'தியோடலைட்' எனப்படும் தொலைநோக்கு கருவியான 'தளமட்ட அளவு மானி'யின் மூலம் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி அதன் மூலம் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என்று கணித்தார்.

மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு, ''எப்படியாவது ஒரு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலகத்தின் உச்சியை அடைந்துவிடவேண்டும்'' என்பதுதான் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சி கடந்த 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. இந்த சிகரத்தில் ஏற 1920 முதல் 1952 வரை 7 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியில் முடிந்தன.

அதன்பிறகு முதன்முதலாக 1953-ம் ஆண்டு மே 29-ந்தேதி டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தனர். இவர்களில் நேபாள இந்தியரான டென்சிங் நார்கே மலையேறும் வழிகாட்டி (ஷெர்பா) ஆவார். எட்மண்ட் ஹிலாரி நியூசிலாந்தைச் சேர்ந்த மலைஏறும் வீரர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முதன் முதலில் சாதனை படைத்த இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் அவதார் சிங் சீமா. இவர் அந்த சிகரத்தில் ஏறிய 16-வது வீரர் ஆவார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர் பச்சேந்திரி பால் (1984 ேம 23).

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உச்சிக்கு சென்று பின்னர் கீழே இறங்கி வர 10 வாரங்கள் வரை ஆகும். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் ஏறி சாதனை படைத்துள்ளனர். கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி என்ற 34 வயது பெண் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தார். இதன்மூலம் எவரெஸ்டின் உச்சிக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். இதேபோல் சென்னை கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு வீரரான ராஜசேகர் பச்சை (வயது 28) என்பவரும் எவரெஸ்டில் ஏறி சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

எவரெஸ்டின் உச்சியில் வெப்பநிலை எப்போதும் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என்பதால், அங்கு உயிரினங்கள் வாழ்வது மிகவும் சிரமம்.

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதாலும், பனிப்புயல் வீசும் என்பதாலும், அப்போது யாரும் எவரெஸ்டில் ஏற முயற்சிப்பது இல்லை.

கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்லச்செல்ல காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வரும். 5 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் தரை மட்டத்தில் இருப்பதை விட பாதி அளவு ஆக்சிஜன்தான் இருக்கும். இதனால்தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச்செல்கிறார்கள்.

1953-க்கு முன்பும், அதற்கு பின்பும் எவரெஸ்ட்டில் ஏற முயன்ற 300-க்கும் அதிகமானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களில் பலரது உடல்கள் கிடைக்கவில்லை. பலர் பாதி தூரத்திலேயே தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள்.



எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல 3 பாதைகள் உள்ளன. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கும்பு பள்ளத்தாக்கு சென்று அங்கிருந்து தெற்கு பாதை வழியாக மலை ஏறுவது முதல் பாதை ஆகும். இந்த பாதை ஓரளவு பாதுகாப்பானது என்பதால் பெரும்பாலான வீரர்கள் இந்த பாதையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வழியில் 5,270 மீட்டர் உயரத்தில் அடித்தள முகாமும், 6,035 மீட்டர் உயரத்தில் 1-வது முகாமும், 6,474 மீட்டர் உயரத்தில் இரண்டாவது முகாமும், 7,158 மீட்டர் உயரத்தில் 3-வது முகாமும், 7,906 மீட்டர் உயரத்தில் 4-வது முகாமும் உள்ளன. அதற்கு அடுத்து கடைசியாக 8,848.86 மீட்டர் (29,028 அடி) உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிப்பகுதி உள்ளது.

மலையேறுபவர்கள் ஒவ்வொரு முகாமிலும் தங்கி ஓய்வெடுத்துவிட்டுத்தான் ஏறுவார்கள். தொடர்ந்து ஏற முடியாதவர்கள் இந்த முகாம்கள் வரை சென்று விட்டு கீழே இறங்கிவிடுவார்கள்.

திபெத்தின் லாசா நகர் வழியாக ஏறும் இரண்டாவது பாதை வடக்கு பகுதியில் உள்ளது. இது செங்குத்தானது-ஆபத்தானது மட்டுமின்றி இங்கு அடிக்கடி பனிச்சரிவும் ஏற்படும். இந்த பாதையில் அடித்தள முகாம் 17,200 அடி உயரத்தில் இருக்கிறது.

மூன்றாவது பாதை நேபாளத்தில் உள்ள தென்கிழக்கு பாதை. இது முதல் பாதையை போன்று அதிக ஆபத்து இல்லாதது. இந்த பாதை வழியாக செல்வது தூரம் அதிகம் என்றாலும் செங்குத்தான ஏற்றம் அதிகம் கிடையாது.

எவரெஸ்டில் ஏறுவது ஒருபுறம் சாதனை என்றாலும், மற்றொருபுறம் இன்னொரு வேதனையும் இருக்கிறது.




இந்த பூமிப் பந்தில் மிகவும் உயரமான இடம் என்ற வகையில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த எவரெஸ்ட், உலகிலேயே உயரமான குப்பை கிடங்காக மாறி வருவது மிகவும் வருத்துத்துக்குரிய விஷயம் ஆகும்.

ஒரு காலத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். இப்போதெல்லாம் மலைப்பகுதிகளில் 'டிரக்கிங்' (மலையேறுதல்) போவது போல் 'திரில்'லான அனுபவத்துக்காக ஏராளமான பேர் எவரெஸ்டில் ஏற கிளம்பிவிட்டார்கள். ஆண்டுக்கு சுமார் 600 பேர் எவரெஸ்டில் ஏறுகிறார்கள். எங்கேயும் கூட்டம் அதிகமானால் என்ன நடக்குமோ அதுதான் எவரெஸ்டிலும் நடக்கிறது. மலையேறுபவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் தங்கும் கூடாரங்கள், பிளாஸ்டிக் பைகள், காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு டப்பாக்கள், குடிநீர் பாட்டில்கள், துணிகள், காகிதங்கள், காலணிகள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு வருகிறார்கள். முகாம்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக கிடக்கின்றன.

மேலும் சுவாசிக்க முடியாமலும், குளிர் தாங்க முடியாமல் இறந்தவர்களின் உடல்களும், மனித கழிவுகளும் ஆங்காங்கே கிடக்கின்றன. எங்கும் பனிக்குவியலாக இருப்பதால் உடல்கள் கெட்டுப்போவது இல்லை. அப்படியே கிடக்கின்றன.

இதுவரை 300 பேர் வரை இறந்து இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மோசமான வானிலை காரணமாக உடல்களை அங்கிருந்து மீட்டு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஹெலிகாப்டர் உதவியுடன் சுமார் 100 உடல்கள் வரை மீட்கப்பட்டு உள்ளன. மற்ற உடல்கள் அங்கேயே கிடக்கின்றன. இதனால் எவரெஸ்ட் அசுத்தமாகவும், குப்பை மேடாகவும் மாறி அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

மலையேறும் ஒவ்வொருவரும் சராசரியாக 8 கிலோ கழிவுப் பொருட்களை அங்கே போட்டுவிட்டு வருவதாகவும், நூறு பேரில் ஒருவர் உயிரிழப்பதாகவும் ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.

நேபாள அரசும், சீன அரசும் அவ்வப்போது குப்பைகளை அகற்றி வருகின்றன. நேபாள அரசின் சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு, எவரெஸ்டில் குப்பைகள் சேருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மலையேறுபவர்களிடம் இருந்து வைப்புத்தொகையாக 4 ஆயிரம் டாலர் பெறுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தலா 8 கிலோ குப்பையை கீழே வரும் போது கொண்டு வந்தால், அந்த வைப்புத்தொகையை திருப்பிக் கொடுத்து விடுகிறது.

இதேபோல் சீன அரசு, மலையேறுபவர்கள் குப்பையை திருப்பி கீழே கொண்டு வராவிட்டால் கிலோவுக்கு 100 டாலர் வீதம் அபராதம் விதிக்கிறது.

ஆனால் பலர் இந்த வைப்புத்தொகை மற்றும் அபராதத்தை ஒரு பொருட்டாக கருதாமல் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு இறங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவும், ஆண்டுக்கு ஆண்டு மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், குப்பைகள் மலைபோல் குவிகின்றன.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் சுற்றுச்சூழல் நாசமாவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் மிகுந்த கவலை தெரிவித்து உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் நாசமாவது பற்றி வேதனை தெரிவித்துள்ள பிரபல நடிகை கங்கனா ரணாவத், ''மனிதர்களிடம் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்'' என்று அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

''நம் மக்கள் எவரெஸ்ட் சிகரத்தைகூட விட்டுவைக்கவில்லை'' என்று தமிழக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும். மலையேறுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் யோசனை தெரிவித்து உள்ளனர்.

எவரெஸ்டில் ஏறுவதற்கு சில காலம் தடை விதிக்கலாம் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறி இருக்கிறார். மலையேறும் ஒவ்வொருவருக்கும் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கலாம் என்றும், எவரெஸ்டை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள அந்த தொகையை பயன்படுத்தலாம் என்றும் மற்றொருவர் யோசனை தெரிவித்து இருக்கிறார்.

எவரெஸ்ட் சிகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதிலும், அதன் பெருமையை பாதுகாப்பதிலும், அரசாங்கங்களுக்கு இருப்பதை விட அதில் ஏறி சாதனை படைப்பவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

நாம் வாழும் பூமியை நேசிப்போம்; இயற்கையை பாதுகாப்போம்...

உயரம் பற்றிய கருத்து வேறுபாடு

எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் என்ன? என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்த சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளதால், அந்த நாடு சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. சிகரத்தில் உள்ள பனிக்கட்டியின் உயரத்தையும் கணக்கில் கொண்டு இவ்வாறு கூறுகிறது. உலகில் மற்ற நாடுகளில் உள்ள சிகரங்களின் உயரத்தை அளவீடு செய்யும் போது பனிக்கட்டியின் உயரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருப்பதால், அதையும் சேர்த்து எவரெஸ்டின் உயரம் 8,848.86 மீட்டர் என்கிறது நேபாளம். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஆனால் அண்டை நாடான சீனாவோ, பனிக்கட்டியின் உயரத்தை கணக்கில் சேர்க்காமல், சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர்தான் என்கிறது. அதாவது உயரத்தை 4.86 மீட்டர் குறைத்து சொல்கிறது. இது தொடர்பாக நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க நிலஅளவை ஆய்வுத்துறை நவீன கருவி மூலம் எவரெஸ்டை அளந்து, சிகரத்தின் உயரம் 8,850 மீட்டர் என்று அறிவித்தது. ஆனால் இதை நேபாளம் ஏற்கவில்லை.

ஒரு சில மீட்டர் உயர வேறுபாட்டால், 'உலகிலேயே உயரமான சிகரம்' என்ற அந்தஸ்தை எவரெஸ்ட் இழந்துவிடப்போவது இல்லை என்பதால். இது தொடர்பான சர்ச்சைகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது.

பரிசு வழங்கிய நேரு



எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் இருவரும் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர்கள் என்றாலும், சிகரத்தின் உச்சிக்கு சென்று முதலில் காலடி வைத்தவர் டென்சிங்தான். அப்போது அவருக்கு வயது 39.

அவர் இந்த சாதனையை நிகழ்த்தியதும், அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, டென்சிங்கை தனது இல்லத்துக்கு அழைத்து விலையுயர்ந்த ஆடைகளை அவருக்கு பரிசாக வழங்கி கவுரவித்தார். அத்துடன் டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தை தொடங்கி வைத்தார். அதில் டென்சிங் பயிற்சியாளர் ஆனார். தனது வாழ்நாளில் 6 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள டென்சிங் 1986-ம் ஆண்டு 71-வது வயதில் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் மரணம் அடைந்தார்.

டென்சிங்கின் மகனான ஜம்லிங் டென்சி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996-ம் ஆண்டு எவரெஸ்டில் ஏறி உச்சியை அடைந்து, 'புலிக்கு பிறந்தது பூனையாகாது' என்பதை நிரூபித்தார்.

நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட ஹிலாரி மலையேற்ற வீரர் மட்டுமின்றி விமானியும் ஆவார். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று உள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது இவருக்கு 33 வயது. இவர் 2008-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி தனது 88-வது வயதில் காலமானார்.

பூமியில் தாழ்வான இடம்



உலகில் உயரமான இடம் என்று எவரெஸ்ட் இருக்கும் போது, மிகவும் தாழ்வான இடம் என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? ஆம்... இருக்கிறது.

அதன் பெயர் மரியானா டிரஞ்ச் எனப்படும் மரியானா அகழி. இது மிகப்பெரிய கடல் அகழி ஆகும். இந்த அகழி ஜப்பானுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா என்ற தீவுக்கு மேற்காக 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2,550 கி.மீ. நீளமும், 69 கி.மீ. அகலமும் கொண்ட இந்த அகழியின் ஆழம் 10,984 மீட்டர் ஆகும். அதாவது சுமார் 11 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.

ஸ்பெயின் நாட்டு அரசி மரியானாவின் நினைவாக இந்த அகழிக்கு மரியானா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அப்படியே பெயர்த்துக் கொண்டு வந்து மரியானா அகழிக்குள் போட்டால் மூழ்கிவிடும். அதற்கு மேலும் 2.5 கி.மீ. உயரத்துக்கு கடல்நீர் நிற்கும். அவ்வளவு ஆழமானது இந்த அகழி.

உலகிலேயே மிகவும் ஆழமான இடம் இதுதான் என்று கண்டறியப்பட்டதும், 1875-ம் ஆண்டு இரும்பு வடத்தை உள்ளே இறக்கி ஒலி அலையின் மூலம் ஆழத்தை அளக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது சரிவரவில்லை. அதன்பிறகு 1962-ம் ஆண்டு எம்.வி.ஸ்பென்சர் எப் பயர்டு என்ற கப்பலில் சென்று, தரையில் உள்ள குழியின் ஆழத்தை அளக்கும் அளவுமானி முறையில் சிறிய எந்திரத்தை அகழியின் தரைமட்டம் வரை இறக்கி அளந்த போது, அதன் ஆழம் 10,984 மீட்டர் என தெரியவந்தது. அந்த இடத்தின் அழுத்தம் கடலின் மேல்மட்டத்தில் இருப்பதை விட 1,071 மடங்கு அதிகம் என்றும், அங்குள்ள வெப்பநிலை 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் என்றும் கண்டறியப்பட்டது.

முதன் முதலாக 1960-ம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி டான் வால்ஷ் என்ற அமெரிக்க கடற்படை வீரரும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெருங்கடல் ஆராய்ச்சியாளர் சாக் பிக்கார்ட் என்பவரும் நீர்மூழ்கி வாகனத்தின் மூலம் மரியானா அகழியின் தரைப்பகுதி வரை சென்று சாதனை படைத்தனர்.

அதன்பிறகு 'டெர்மினேட்டர்', 'ராம்போ', 'ஏலியன்', 'டைட்டானிக்', 'அவதார்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கனடாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குனரும், கடல் ஆராய்ச்சியாளருமான ஜேம்ஸ் கேமரூன், ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட 'டீப் சீ சேலஞ்சர்' என்ற நீர்மூழ்கி மூலம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி அகழியின் அடிப்பகுதி வரை சென்று திரும்பினார்.

பூமியிலேயே மிகவும் ஆழமான இடமாக இருப்பதால், அணுக்கழிவுகளை அந்த இடத்தில் போட்டு புதைத்துவிடலாமா? என்று சர்வதேச அளவில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் நகர்ந்து பூகம்பம் ஏற்படும் போது அணுக்கழிவுகள் நகர்ந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

உலகில் தரைப்பகுதியில் உள்ள ஆழமான இடம் பூமியின் தென்கோடி முனையான அண்டார்டிகாவில் உள்ள 'டென்மான் கிளேசியர்' என்ற பனி பள்ளத்தாக்கு ஆகும். 100 கி.மீ. நீளமும், 20 கி.மீ. அகலமும் கொண்ட இந்த இடம், கடல் மட்டத்தில் இருந்து 3.5 கி.மீ. ஆழத்தில் உள்ளது. என்றாலும் இந்த இடத்தில் கடல் நீர் கிடையாது. முழுக்க முழுக்க பனிப்பாறைகளாக உள்ளது.

எவரெஸ்டின் தூங்கும் அழகி



•ராணுவம் சார்ந்தவர்களே முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். அதன்பிறகுதான் மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களும் மற்றவர்களும் ஏறத் தொடங்கினார்கள்.

•எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஜப்பானைச் சேர்ந்த தைபே ஜூன்கோ. இவர் 1975-ல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

•முதன் முதலாக ஆக்சிஜன் (பிராணவாயு) சிலிண்டர் இல்லாமல் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர், பீட்டர் ஹாபலர் ஆகியோர் 1978-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தனர்.

•ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்டில் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை பெற்ற அமெரிக்காவின் பிரான்சிஸ் அர்சென்டீவ், கீழே இறங்கும் போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். ஆனால் அவருடன் சென்றிருந்த அவரது கணவர் செர்ஜி அர்சென்டீவ் பிழைத்துக் கொண்டார். மனைவியை இழந்த வேதனையில் அவர் கண்ணீர் விட்டார். பிரான்சிஸ் அர்சென்டீவ் ''எவரெஸ்ட் சிகரத்தின் தூங்கும் அழகி'' என அழைக்கப்படுகிறார்.

• எவரெஸ்டில் முதன் முதலாக தனியாக ஏறி சாதனை படைத்தவர் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர். அவர் ஏறிய ஆண்டு 1980.

• 53 வயதான காமி ரீட்டா ஷெர்பா 28 முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்து இருக்கிறார். இவர் கடைசியாக ஏறியது கடந்த மாதம் 17-ந் தேதி.

•அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ரோமிரோ என்ற 13 வயது சிறுவன், மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற பெருமையை பெற்றான். 2010-ம் ஆண்டு மே 22-ந் தேதி இவன் சிகரத்தின் உச்சியை சென்றடைந்தான்.

•சிகரத்தில் ஏறும் வீரர்கள் கொண்டு செல்லும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 5 மணி நேரம் சுவாசிக்க போதுமானதாக இருக்கும். சிகரத்தில் ஏறி குறிப்பிட்ட தூரம் கீழே இறங்க சுமார் 35 மணி நேரம் ஆகும் என்பதால் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் 7 சிலிண்டர்கள் கைவசம் இருக்க வேண்டும்.

• ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏறினாலும் மேலே ஏறும் போது திசுக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவும், மூளை மற்றும் நுரையீரலுக்கு அதிக அளவில் ரத்தம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

•சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டு, தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே பலர் இறந்து கிடப்பதை எவரெஸ்ட் சிகரத்தில் பார்க்கலாம். உடன் செல்பவர்கள் அவர்களின் உடலை பனிக்கட்டியை தோண்டி புதைக்கவும் முடியாது; கீழே இழுத்துக் கொண்டு வரவும் முடியாது.

•பெரும்பாலான மரணங்கள் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில்தான் நிகழ்கின்றன. இதனால் அந்த பகுதியை 'மரண பிராந்தியம்' என்கிறார்கள்.

•இந்த சிகரத்தில் ஏறுபவர்கள் '2 மணி விதி' என்ற ஒரு விதியை பின்பற்றுகிறார்கள். அதாவது பிற்பகல் 2 மணிக்குள் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட வேண்டும். அதன்பிறகு உச்சிக்கு சென்றால், இருட்டுவதற்குள் அவர்களால் கீழே உள்ள முகாமுக்கு திரும்ப முடியாது. இதனால் வழி தெரியாமல் பனிப்புயலில் சிக்கி உயிரிழக்க நேரிடும். இப்படி 2 மணிக்குள் சிகரத்தில் ஏற முடியாத பலர், உச்சிக்கு செல்லும் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்த சம்பவங்கள் உண்டு.

•நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை எவரெஸ்டின் உயரம் 40 செ.மீ. அதிகரிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

• எவரெஸ்ட் சிகரத்தை மையமாக வைத்து 'எவரெஸ்ட்' என்ற பெயரில் 2015-ம் ஆண்டு ஆங்கில படம் ஒன்று வெளியானது. இந்த படத்தின் 'ஷூட்டிங்' 2014-ம் ஆண்டு சிகரத்துக்கு செல்லும் வழியில் உள்ள 2-வது முகாம் பகுதியில் நடந்த போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 16 ஷெர்பாக்கள் உயிரிழந்தனர்.

•2008-ம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது, மே 28-ந் தேதி ஒலிம்பிக் ஜோதி எவரெஸ்ட் சிகரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அன்று காலை 9.17 மணிக்கு ஜோதி சிகரத்தின் உச்சியை சென்றடைந்தது.

•நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் பாதையில் 4,270 மீட்டர் உயரத்தில் உள்ள கும்புவேலியில் சிறு சிறு கிராமங்கள் உள்ளன. கிராமவாசிகள் அங்கிருந்து மேலே 16,000 ஆயிரம் அடி உயரம் வரை சென்று கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். குளிர்காலம் நெருங்கும் போது கீழே வந்துவிடுவார்கள்.

• நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடுத்துள்ள 1,243 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதி 1976-ம் ஆண்டு 'சாகர்மாதா தேசிய பூங்கா'வாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவை, 'யுனெஸ்கோ' அமைப்பு 1979-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.


Next Story