தியாகத்தில் மலர்ந்த சுதந்திரம்


தியாகத்தில் மலர்ந்த சுதந்திரம்
x

சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை.

சுதந்திரம் இல்லா வாழ்க்கை கூண்டுக்குள் அடைபட்ட கிளியை போன்றது.

கூண்டை திறந்ததும், விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் வானில் சிறகடித்து பறந்து செல்லும் கிளியின் உற்சாகத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பறிக்கப்பட்ட சுதந்திரம் மீண்டும் கிடைத்ததால் வந்த மகிழ்ச்சி அது.

இன்று நாம் உண்ணும் கனி நாம் விளைவித்தது அல்ல. யாரோ, எங்கோ, எப்போதோ நட்ட மரத்தின் கனியை நாம் இப்போது ருசிக்கிறோம்.

யாரோ எப்போதோ போட்ட பாதையில் நாம் சுகமாக பயணிக்கிறோம்.

யாரோ எப்போதோ வெட்டி வைத்ததால் நிரம்பிய குளத்தில் நாம் ஆனந்தமாய் குளிக்கிறோம்.

இப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் நம் முன்னோர்களின் உழைப்பால், தியாகத்தால் கிடைத்த பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

யாரோ கனியை ருசிப்பதற்காக நாம் மரம் நட வேண்டுமா? மற்றவர்கள் பயணிக்க நாம் கஷ்டப்பட்டு சாலை அமைக்க வேண்டுமா? மற்றவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக குளம் வெட்டுவதில் நமக்கு என்ன லாபம் என்று நம் முன்னோர்கள் நினைத்து இருந்தால் நாம் எவ்வளவு சிரமப்பட்டு இருப்போம்?...

அன்று நம் முன்னோர்கள் போட்ட விதை நமக்கு பலன் தருகிறது. அதுபோல் அன்று அவர்கள் வெள்ளையர்களிடம் அடி-உதை வாங்கி, ரத்தம் சிந்தி அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.

ஆங்கிலேயர்களின் அடிமைத்தழையில் இருந்து இந்தியா விடுபட்டு 75 ஆண்டுகள் கடந்து விட்டன. நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவின் மக்கள் தொகை 34 கோடி. இப்போது 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரத்துக்கு பின்னர், அதாவது 1947-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள்தான்.

சுதந்திர இந்தியாவில் வாழும் நாம், அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் அனுபவித்த அடக்குமுறைகள்-துயரங்களை படித்தும், கேட்டும் அறிந்திருக்கிறோமே தவிர, அதை நாம் சந்தித்தது இல்லை.

வியாபாரிகள் என்ற பெயரில் 1600-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி, இங்குள்ள மக்களிடம் நிலவிய ஒற்றுமையின்மையையும், அறியாமையையும் பயன்படுத்தி, நாட்டையே பிடித்துக்கொண்டனர். இதனால் சுமார் 350 ஆண்டுகள் வெள்ளையர்களிடம் அடிமையாக இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, மவுலானா ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற மாபெரும் தலைவர்கள் செய்த தியாகங்களும், அனுபவித்த துயரங்களும் வார்த்தைகளில் அடங்காதவை. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களிலேயே பலரது வாழ்க்கை கரைந்து போனது.

வசதியான குடும்பத்தில் பிறந்து சட்டம் படித்து வக்கீல் தொழில் செய்துவந்த வ.உ.சிதம்பரனார் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர். ''சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்'' என்று முழங்கிய பால கங்காதர திலகரை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் போக்குவரத்தை தொடங்கியதால் சந்தித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆங்கிலேயர்களால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனார் கோவை சிறையிலும், கண்ணனூர் சிறையிலும் அனுவித்த துயரங்கள் கணக்கில் அடங்காதவை. விடுதலையாகி வெளியே வந்த அவர் தனது வாழ்வாதாரத்துக்காக சென்னையில் சிறிது காலம் மண்எண்ணெய் கடை நடத்தினார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இப்படி எத்தனையோ தலைவர்களின் தியாகங்களில் பிறந்ததுதான் இந்திய சுதந்திரம்.

இந்திய விடுதலை போராட்டத்துக்கான முதல் விதை நம் வேலூரில்தான் ஊன்றப்பட்டது. ஆம்... 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி நடைபெற்ற 'வேலூர் சிப்பாய் கலகம்' இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் படையில் இருந்த இந்திய வீரர்களிடம் ஆங்கிலேயர்கள் இன, மத, சமூக ரீதியாக பாகுபாடு காட்டினார்கள். குறிப்பாக இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்கள் தங்கள் மத அடையாளங்களுடன் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

அப்போது சென்னை ராணுவப்பிரிவின் தலைமை தளபதியாக இருந்த ஜான் கிரடாக், வீரர்கள் நெற்றியில் திருநீர் பூசக்கூடாது, தாடி வைக்கக்கூடாது, அளவோடுதான் மீசை வைக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அத்துடன் தலைப்பாகை அணியக்கூடாது என்றும், ஆங்கிலேய வீரர்களைப் போல் வட்டவடிவ தொப்பிதான் அணியவேண்டும் என்றும் கூறினார். இது தங்களை மதம் மாற்றும் முயற்சி என்று கருதிய இந்திய வீரர்கள் சிலர், அந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களை சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டு சென்று பிரம்படி கொடுத்து கடுமையாக தண்டித்தனர்.

இதை அறிந்ததும் வேலூர் கோட்டையில் இருந்த மற்ற சிப்பாய்கள் கொந்தளித்தனர். அங்கிருந்த இந்திய சிப்பாய்கள் அனைவரும் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி நள்ளிரவில் ஒன்றுகூடி கலகத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள், அங்கிருந்த 69-வது படைப்பிரிவைச் சேர்ந்த 14 இங்கிலாந்து அதிகாரிகளையும் 115 வீரர்களையும் சுற்றிவளைத்து பிடித்து கொன்றனர். அத்துடன் திப்பு சுல்தானின் கொடியை கோட்டையில் ஏற்றியதோடு, அவரது மகன் பதே ைஹதரை தங்கள் மன்னராக அறிவித்தனர். நள்ளிரவு தொடங்கிய இந்த கலகம் அதிகாலை வரை நீடித்தது.

கலகத்தின்போது வேலூர் கோட்டையில் இருந்து ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நைசாக தப்பி ஆற்காடு சென்று, அங்கிருந்த தங்கள் படையினரிடம் நடந்த சம்பவம் பற்றிய விவரங்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ரோல்லோ கில்லஸ்பி என்ற அதிகாரியின் தலைமையில் ஆயுதங்களுடன் ஏராளமான ஆங்கிலேய படை வீரர்கள் வேலூர் கோட்டைக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த சண்டையில் 350 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மேலும் 350 பேர் படுகாயம் அடைந்தனர். கோட்டையின் ஒரு பகுதியில் மறைந்து இருந்த சிப்பாய்கள் 100 பேரை ஆங்கிலேய வீரர்கள் வெளியே இழுத்து வந்து சுவரை பார்த்தபடி நிற்க வைத்து ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர்.

இந்த கலகத்தை தொடர்ந்து, சென்னை ராணுவத்தின் 3 பிரிவுகளையும் ஆங்கிலேயர்கள் கலைத்ததோடு, வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் குடும்பத்தினரை கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூரில் நடந்த இந்த சிப்பாய் கலகம், இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கையாக அமைந்தது.

வேலூர் சிப்பாய் கலகத்தை தொடர்ந்து 1857-ம் ஆண்டு மே 10-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கலகம் வெடித்தது. ஆங்கிலேய படையில் இருந்த இந்தியர்கள் அன்றைய தினம் திடீரென்று கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கலகத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலகத்துக்கும் மத ரீதியிலான உணர்வு முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'என்பீல்டு' ரக துப்பாக்கியில் குண்டுகளை (ரவை) நிரப்பும் முன் அதன் மேல் பகுதியில் உள்ள உரையை கடித்து நீக்கிவிட்டுத்தான் உள்ளே செலுத்த வேண்டும். அந்த குண்டுகளின் மேல் உரையில் பன்றி, பசுவின் கொழுப்பு தடவப்பட்டு இருக்கும். இது தங்கள் மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதால், இந்திய சிப்பாய்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தனர். இந்த கலகம் டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ நகரங்களுக்கும் உடனடியாக பரவியது.

இதனால் உஷாரான ஆங்கிலேயர்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்ததால் கலகம் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் நாடு முழுவதும் உள்ள மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை உண்டாக்கியது. இதை அறிந்த ஆங்கிலேய அரசு, கிழக்கிந்திய கம்பெனியால் இனி இந்தியர்களை அடக்கி வைத்திருக்க முடியாது என்று கருதி 1858-ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதாவது இந்தியா இங்கிலாந்தின் காலனி நாடாக மாறியதோடு, ஆங்கிலேய அரசு நியமித்த கவர்னர் ஜெனரல்கள் நம் நாட்டை ஆளத்தொடங்கினார்கள். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவுக்கு வர மீரட் கலகம் முக்கிய காரணமாக அமைந்தது.

ஆட்சி அதிகாரம் நேரடியாக ஆங்கிலேய அரசின் கைகளுக்கு சென்ற பிறகு மக்களிடையே புதிய சிந்தனையும் எழுச்சியும் உருவானது. இதனால் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டில் நிறைய அரசியல் இயக்கங்கள் உருவாயின. அதில் குறிப்பிடத்தக்கது இந்திய தேசிய காங்கிரஸ். 1885-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது.

ஒரே சாவி எல்லா பூட்டுகளுக்கும் பொருந்தாது... ஒரே மருந்து எல்லா நோய்களையும் குணப்படுத்தாது... அதேபோல் ஒரே அணுகுமுறை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆகாது. அந்தந்த காலகட்டம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப உத்திகளையும், அணுகுமுறைகளையும் மாற்றிக்கொள்வதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.

அகிம்சை முறையில் அறவழியில் போராடி சுதந்திரம் பெறுவது மகாத்மா காந்தியின் கொள்கையாக இருந்தது. லட்சியம் உயர்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் அந்த அகிம்சாமூர்த்தி உறுதியாக இருந்தார். காந்தியின் சமாதான வழியை-கொள்கையை ஏற்றுக்கொண்ட மிதவாதிகளெல்லாம் அவர் பின்னால் அணிவகுத்தார்கள்.

அதேசமயம், முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றும் சாத்வீக வழியில் வெள்ளையர்களை விரட்ட முடியாது என்றும் பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், பிபின் சந்திரபால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் கருதினார்கள். 'இந்திய தேசிய ராணுவம்' என்ற பெயரில் படை ஒன்றை உருவாக்கி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அவருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உறுதுணையாக இருந்தார்.

காந்தியின் அறவழி போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்ததால் ஒரு கட்டத்தில் பணிந்து போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை இங்கிலாந்து அரசுக்கு ஏற்பட்டது. அதேசமயம் ஆயுதம் ஏந்தி போராடியவர்களால் ஏற்பட்ட நெருக்கடியும், இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட இழப்புகளும் ஆங்கிலேயர்களை சிந்திக்க வைத்தது. இதனால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்கள். போகும் போது நாட்டை துண்டாடவும் தவறவில்லை.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த மேலும் பல நாடுகள் விடுதலை பெற இரண்டாம் உலகப்போர் வழி வகுத்தது.

இந்திய சுதந்திரம், காந்தியின் அகிம்சை கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை; இல்லாத போதுதான் அதன் மகிமை புரியும். சுதந்திரமும் அப்படித்தான்.

அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து இருந்தார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ்வதுதான் லட்சியமாக இருந்ததால், சுதந்திர போராட்ட தலைவர்களை தங்கள் வழிகாட்டியாக கருதி போற்றி கொண்டாடினார்கள்.

அதே உணர்வும் தேசப்பற்றும் மக்களிடம் என்றும் நீடிப்பதோடு, தன்னலமற்ற தலைவர்கள் செய்த தியாகங்களை நாட்டின் வருங்கால சிற்பிகளான இளைய தலைமுறையினர் முழுமையாக அறியச் செய்திடவேண்டும்.

ஏனெனில், வந்த வழி மறந்துவிட்டால் போகும் வழி தெரியாமல் போய்விடும். அதற்கு இடம் தரலாமா?...

உலகிலேயே அதிக காலம் சிறைவாசம் அனுபவித்தவர்




ஒருங்கிணைந்த இந்தியாவில் வங்காளதேசத்தில் பிறந்த திரிலோக்யநாத் சக்ரவர்த்திதான் உலகிலேயே அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி ஆவார். தனது 17 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவர், முதன் முதலாக 1908-ம் ஆண்டு கைதானார். வாழ்நாளில் 6 முறை கைது செய்யப்பட்டு அந்தமான் சிறை, பர்மாவில் உள்ள மண்டாலா சிறை என பல்வேறு சிறைகளில் 30 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து இருக்கிறார். சுதந்திரத்துக்கு பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். திரிலோக்யநாத் சக்ரவர்த்தி 1970-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி தனது 81-வது வயதில் டெல்லியில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

தூக்கு கயிற்றை முத்தமிட்ட முதல் தியாகி



இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தூக்கில் போடப்பட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸ். அத்துடன் மிக குறைந்த வயதில் தூக்கு கயிற்றை முத்தமிட்ட சுதந்திர போராட்ட வீரரும் இவர்தான்.குடிராம் போஸ். மேற்கு வங்காள மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள மகோபானி என்ற இடத்தில் 1889-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி பிறந்தார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் இவரும் இவரது கூட்டாளி பிரபுல்ல சாக்கி என்பவரும் டக்ளஸ் கிங்ஸ்போர்டு என்ற ஆங்கிலேய நீதிபதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக நீதிபதி தப்பிவிட, இரு வெள்ளைக்கார பெண்மணிகள் உயிரிழந்தனர்.நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பிரபுல்லா சாக்கி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள, குடிராம் போசை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கோர்ட்டில் குடிராம் போசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து முசாபர்பூரில் உள்ள சிறையில் 1908-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது 8 மாதம்தான் ஆகி இருந்தது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் மனஉறுதி

நாடா? வீடா? என்று வரும் போது நாட்டு நலனே முக்கியம் என்று வாழ்ந்து மறைந்த எத்தனையோ தியாகிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய தன்னலமற்ற தியாகத்தால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தியாகிகளில் ஒருவர்தான், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல். மகாத்மா காந்தியுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டேலின் வாழ்க்கையில் நடந்த ஒரு உருக்கமான சம்பவம்...

ஆங்கிலேய அரசாங்கம் சுதந்திர போராட்ட வீரர்கள் 46 பேருக்கு விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் அந்த 46 பேரையும் காப்பாற்றுவதற்காக அவர்களுடைய வக்கீல் வாதாடிக் கொண்டிருக்கிறார். அந்த வக்கீல் வேறு யாரும் அல்ல; சர்தார் வல்லபாய் பட்டேல்தான்...அப்போது கோர்ட்டு ஊழியர் ஒருவர் வந்து பட்டேலிடம் ஒரு சிறிய காகிதத்தை கொடுக்க, அவர் அதை வாங்கி படித்துப்பார்க்கிறார். பின்னர் அதை மடித்து சட்டைப்பையில் வைத்துவிட்டு தொடர்ந்து வாதாடுகிறார்.வழக்கு விசாரணையின் முடிவில் 46 பேரும் அப்பாவிகள் என்று கூறி அவர்களை விடுதலை செய்கிறார் நீதிபதி. பட்டேலின் வாதத்திறமையால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.விசாரணை முடிந்ததும் நீதிபதி, பட்டேலை அழைத்து, ''ஊழியர் ஒருவர் வந்து உங்களிடம் ஒரு காகிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றாரே! அதில் என்ன எழுதி இருக்கிறது?'' என்று கேட்கிறார்.

அதற்கு பட்டேல், ''என் மனைவி இறந்துவிட்டதாக அதில் எழுதி இருந்தது'' என்று முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொல்கிறார்.இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நீதிபதி அதிர்ச்சி அடைந்தவராக, ''நீங்கள் ஏன் உடனடியாக கிளம்பிச் செல்லவில்லை?'' என்று கேட்க, அதற்கு பட்டேல் இப்படி பதில் சொன்னார்.''நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். தங்களுக்காக வாதாடி நீதி பெற்றுத்தருமாறு எனது கட்சிக்காரர்கள் எனக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி அநீதி இழைக்க முடியும்? எனது மனைவி இறந்துவிட்டார். நான் விரும்பினாலும் அவரது உயிரை திரும்ப கொண்டுவர முடியாது. அவரது மரண செய்தியை அறிந்ததும் நான் கிளம்பி இருந்தால் என்னை நம்பிய அப்பாவிகள் 46 பேருக்கும் தண்டனை உறுதியாகி அவர்கள் தங்கள் உயிரை இழக்க நேர்ந்திருக்கலாம். அதற்கு இடம் கொடுக்கலாமா? என்று பட்டேல் திருப்பி கேட்கிறார்.இதைக் கேட்டதும் தொழில் மீது அவருக்குள்ள பக்தியையும், நேர்மையையும், மனஉறுதியையும் பார்த்து நீதிபதி வியந்து போகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் நேருவுக்கு உதவியாக துணைப்பிரதமராக பதவி ஏற்ற பட்டேல், சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி ஆவார். நாடு முழுவதும் சிதறிக்கிடந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை இந்தியாவுடன் இணைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பட்டேல்.

மாவீரன் பகத்சிங்


சுதந்திர போராட்ட வரலாற்றில் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் முக்கிய புரட்சியாளர்களாக விளங்கினார்கள். மாவீரன் பகத்சிங் இளம் வயதிலேயே நாட்டின் சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற கிராமத்தில் தேசப்பற்று மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே பொதுவுடமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரெஜினால்ட் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் ஆங்கிலேய படையினர் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவிகள் ஆயிரம் பேரை பீரங்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், 12 வயது சிறுவனாக இருந்த பகத்சிங்குக்கு அந்த இடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஆயுதம் ஏந்தி போராடுவதன் மூலம்தான் ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து விரட்டமுடியும் என்ற எண்ணம் பகத்சிங் மனதில் ஆழமாக வேரூன்றியது. தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால், குடும்பத்தினர் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்

'இந்துஸ்தான் குடியரசு அமைப்பு' என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் தலைவர் ஆனார். குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பகத்சிங், குற்றம் நிரூபிக்கப்படாததால் 5 வாரங்களில் விடுதலை ஆனார். அவரது 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கம் இளைஞர்களுக்கு புதிய உத்வேதத்தை அளித்தது.

பின்னர், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் மரணத்துக்கு காரணமான ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பகத்சிங் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24. பகத்சிங்கின் வீரமரணம் ஏராளமான இளைஞர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

அந்தமான் செல்லுலர் ஜெயில்


ஆங்கிலேய காலனி ஆட்சியின் போது இந்தியாவிலும், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மாவிலும் (மியான்மர்) அரசுக்கு எதிராக அரசியல் புரட்சி மற்றும் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை அந்தமான் தீவுக்கு கடத்தி விடுவார்கள். இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து வெகுதூரத்தில் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமானுக்கு கடத்தப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு சித்ரவதை செய்யப்பட்டும், பீரங்கியால் சுடப்பட்டும், மரத்தில் தூக்கிலிடப்பட்டும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

1868-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்தமானில் இருந்து தப்பிக்க முயன்ற 238 பேர் கடல் கடந்து சென்றுவிடாதபடி, ஆங்கிலேய படையினர் காடுகளுக்குள் அலைந்து அவர்களை தேடிப்பிடித்து கைது செய்தனர். ஒரு மாதத்திலேயே அனைவரும் பிடிபட்டனர். அப்போது ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டார். 87 பேரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

அந்தமானில் கைதிகளை அடைத்து வைக்க போதிய இடவசதி இல்லாததால் ஆங்கிலேய அரசு போர்ட்பிளேர் நகரில் புதிதாக சிறைச்சாலை ஒன்றை கட்ட முடிவு செய்தது. அப்படி கட்டப்பட்டதுதான் அந்தமான் தீவின் அடையாளமாகவும், தியாகத்தின் சின்னமாகவும் விளங்கும் 'செல்லுலர் ஜெயில்'. வீர சாவர்க்கர், யோகேந்திர சுக்லா, சதன் சந்திர சட்டர்ஜி, சோகன் சிங் உள்ளிட்ட பல தியாகிகள் இங்கு தண்டனை அனுபவித்து உள்ளனர்.

'செல்லுலர் ஜெயில்' என்றால் 'சிற்றறை ஜெயில்' என்று பொருள். அதாவது சின்ன சின்ன அறைகளாக கட்டப்பட்டு இருக்கும். ஒரு அறையில் ஒரு கைதியை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஒரு கைதி மற்றொரு கைதியுடன் பேசக்கூடாது; எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி சிறிய அறைகளாக கட்டினார்கள். இதை 'காலாபாணி சிறை' என்றும் சொல்வார்கள், 'காலாபாணி' என்றால் 'கருப்பு தண்ணீர்' என்று பொருள்.

1896-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறையின் கட்டுமான பணிகள் 1906-ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அந்தமானுக்கு கடத்தப்பட்ட கைதிகளை கொண்டே இந்த சிறையை ஆங்கிலேய நிர்வாகம் கட்டி முடித்தது. பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கருஞ்சிவப்பு நிற செங்கற்கள் மற்றும் மரங்களை கொண்டு இந்த சிறை கட்டப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணியின் போது சித்ரவதை தாங்காமலும், சரியாக உணவு வழங்கப்படாததாலும், கடும் மழையாலும், விஷப்பாம்புகளின் கடியாலும், காலரா, மலேரியா போன்ற நோய்களாலும் ஆயிரக்கணக்கான கைதிகள் உயிரிழந்தனர்.

698 அறைகளுடன் விரிந்து செல்லும் 7 வரிசை கட்டிடங்களுடன் 5 லட்சத்து 17 ஆயிரத்து 352 ரூபாய் செலவில் இந்தசிறை வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. 7 வரிசை கட்டிடங்களும் சந்திக்கும் மையப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் அபாய மணியும் வைக்கப்பட்டது.

33 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்பட்டதால், செல்லுலர் சிறையில் இருந்த கைதிகளை அவர்களுடைய தாயகத்துக்கு அனுப்பி வைக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது 1942-ம் ஆண்டு ஜப்பான் படைகளிடம் இங்கிலாந்து படைகள் தோல்வி அடைந்ததால், அந்தமான் தீவு ஜப்பான் வசமானது. அப்போது தாங்கள் சிறைபிடித்த ஏராளமான இங்கிலாந்து படை வீரர்களை ஜப்பான் ராணுவம் இதே செல்லுலர் சிறையில்தான் அடைத்து வைத்தது. அதாவது இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேய அரசு கட்டிய சிறையில் அவர்களுடைய வீரர்களே அடைக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேய படையினர் மீண்டும் அந்தமானை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த சிறையில் உள்ள 7 வரிசைகளில் 2 வரிசைகள் இடிக்கப்பட்டன. இதற்கு விடுதலை போராட்ட தியாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்ற பகுதிகளை இடிப்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டது. இந்த சிறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், பின்னர் 1969-ம் ஆண்டு இந்த சிறையை தேசிய நினைவுச்சின்னமாக மத்திய அரசு அறிவித்தது.

அந்தமான் சிறையையும், சுதந்திர போராட்டத்தையும் கதைக்களமாக கொண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு நடிப்பில் 1996-ல் சிறைச்சாலை என்ற படம் வெளியானது.


Next Story