கோடையை சமாளிக்க குறுகிய காலத்தில் வளரும் தீவன சோளம்
கோ.எப்.எஸ்.29. என்ற தீவன சோள ரகம் வறட்சியிலும் செழிப்பாக வளர்ச்சி அடைந்து ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஆண்டில் 70 டன் அளவுக்கு மகசூலை தருகிறது.
கோடையில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது சிரமமாக இருக்கலாம். இதனை தவிர்க்க, விவசாயிகள் குறுகிய கால அளவில் அதிக மகசூல் தரும் தீவன சோளத்தை பயிரிட்டு கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். கோ.எப்.எஸ்.29. என்ற தீவன சோள ரகம் வறட்சியிலும் செழிப்பாக வளர்ச்சி அடைந்து ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு ஆண்டில் 70 டன் அளவுக்கு மகசூலை தருகிறது.
அனைத்து மண்ணிலும்...
கோ.எப்.எஸ்.29. ரகமானது பல்லாண்டு தீவன சோளமாகும். இது அனைத்து வகையான மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. ஆண்டுக்கு 5 முதல் 6 தடவை வரை அறுவடை செய்யலாம். அதிக தூர்களுடன் உயரமாக வளரக்கூடியது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதுமானது.
தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்கள் அனைத்திலும் பயிரிடலாம். இதனை பசுந்தீவனமாகவும், காய்ந்த சோள தட்டையாகவும் பால் மாடுகளுக்கு கொடுக்கலாம். இந்த சோளத்தில் புரதச்சத்து 8.91 சதவீதமும், நார்ச்சத்து 35 சதவீதமும், மாவுச்சத்து 44 சதவீதமும் உள்ளது.
இந்த சோளத்திற்கான விதையளவு ஏக்கருக்கு 2 கிலோ ஆகும். வரிசை நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். கைவிதைப்பாக பயிரிட்டால் விதையளவு 5 கிலோ வரை தேவைப்படும். நாற்றுகளுக்கு இடையில் 45 செ.மீக்கு 30 செ.மீ என்ற அளவில் இடைவெளி இருக்க வேண்டும்.
உர அளவு
உர அளவை பொறுத்தமட்டில் அடி உரமாக தொழு உரத்தை இடவேண்டும். ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரம் இடலாம். தழைச்சத்து 18 கிலோ, யூரியா 40 கிலோ, மணிச்சத்து 16 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 100 கிலோ, சாம்பல் சத்து 8 கிலோ, பொட்டாஷ் 14 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மேலுரமாக தழைச்சத்து 18 கிலோ, யூரியா 40 கிலோ என்ற அளவிலும் இடலாம்.
அறுவடை
விதைத்த 60 முதல் 70 நாட்களிலும், அடுத்த ஒவ்வொரு அறுவடையும் 2 மாத இடைவெளியிலும் செய்யலாம். கே.எப்.எஸ்.29 பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 கிலோவும், ஆடுகளுக்கு 3 முதல் 4 கிலோ என்ற அளவிலும் தீவனமாக கொடுக்கலாம்.