வெற்றியை டாக்டர் ராமதாசுக்கு காணிக்கையாக்குவோம்; தர்மபுரியில் வேட்புமனு தாக்கல் செய்த சவுமியா அன்புமணி பேச்சு


வெற்றியை டாக்டர் ராமதாசுக்கு காணிக்கையாக்குவோம்; தர்மபுரியில் வேட்புமனு தாக்கல் செய்த சவுமியா அன்புமணி பேச்சு
x

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தருமபுரி,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி களமிறங்கியுள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தியிடம் சவுமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து சவுமியா அன்புமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், பாம.க. சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கிய டாக்டர் ராமதாசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது என்னுடைய முதல் லட்சியம். இந்த திட்டம் தர்மபுரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கனவு. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தர்மபுரி மாவட்ட மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். மண்ணின் மைந்தர்களை, மீண்டும் சொந்த மண்ணுக்கே வரவழைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு பெரிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதை அடுத்த இலக்காக வைத்துள்ளேன்.

தர்மபுரியில் விளையும் தக்காளி, புளி, மாம்பழம், பட்டு, கிழங்கு வகைகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைப் பொருட்களையும், பதப்படுத்தி வைத்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்து விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தர முயற்சி செய்வேன். அதிக சிறுதானிய வகைகளை விளைவிக்கும் மாவட்டமாக தர்மபுரி இருக்கிறது. அதற்கான வணிகத்தை பெருக்குவது எனது நோக்கமாக இருக்கும்.

பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தர்மபுரி தொகுதியில் வெற்றியை பெற்று, டாக்டர் ராமதாசுக்கு காணிக்கையாக்குவோம். தேர்தல் என்பது எனக்கு புதிதல்ல. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சவாலை தைரியமாக எதிர்கொள்வேன். மக்களின் பேராதரவு எனக்கு இருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. எனது வெற்றி உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story