'பா.ஜ.க.வுடன் சேர்ந்தது குறித்து எம்.ஆர்.ராதா என்ன சொல்லி இருப்பார்?' - ராதிகா சரத்குமார் பதில்


பா.ஜ.க.வுடன் சேர்ந்தது குறித்து எம்.ஆர்.ராதா என்ன சொல்லி இருப்பார்? - ராதிகா சரத்குமார் பதில்
x

தனது தந்தை எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுடன் சேர்ந்தது பற்றி என்ன சொல்லி இருப்பார்? என்ற கேள்விக்கு ராதிகா சரத்குமார் பதிலளித்துள்ளார்.

விருதுநகர்,

நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதையடுத்து ராதிகா தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே பகுத்தறிவுவாதியாகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் அறியப்பட்ட ராதிகாவின் தந்தையான மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா, தற்போது பா.ஜ.க.வுடன் ராதிகாவும், அவரது கணவரும் சேர்ந்திருப்பது குறித்து என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் ராதிகா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"எனது தந்தையிடம் நான் அரசியல் குறித்து பேசியது கிடையாது. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடன் நான் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு அவர் பேசும்போது, அங்குள்ள மக்களை ஊருக்கு திரும்ப வர வேண்டாம் என்று கூறுவார். உங்கள் வாழ்க்கை தரம் இங்கு நன்றாக இருக்கிறது, இங்கேயே இருங்கள் என்று அவர்களிடம் சொல்வார்.

மக்களின் வாழ்க்கை தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இன்று, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மத்திய அரசு இருக்கிறது என்றால், கண்டிப்பாக எனது தந்தை அதை பாராட்டியிருப்பார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Next Story