இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் - சத்யபிரதா சாகு பேட்டி
அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் தற்போது ஓய்ந்தது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணும் நாள் வரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கூடாது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடி. தமிழகத்தில் பதிவான வாக்கு சதவிகிதம் 71.87. ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.