ஆந்திராவில் வன்முறை; மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன்
ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறை தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் தற்போதுவரை அமலில் இருக்கும் சூழலில், ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் நேரில் ஆஜராகி, அங்கு ஏற்பட்ட நிர்வாக கோளாறு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.