வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஏ.சி சண்முகத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு முழுவதும் நேற்று பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேலூர்,
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்டோர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்களில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்களும் இடம் பெற்று இருந்தன. இதன் விவரம் வருமாறு:-
கதிர் ஆனந்த் சொத்து விவரங்கள் வருமாறு:-
கதிர் ஆனந்த் மனைவி பெயர் சங்கீதா. இவர்களுக்கு செந்தாமரை, இலக்கியா என்று 2 மகள்களும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். கதிர் ஆனந்த் கையிருப்பு தொகையாக ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 016-ம், சங்கீதாவிடம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879-ம், செந்தாமரையிடம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 317-ம் உள்ளது. வங்கிக்கணக்குகளில் கதிர்ஆனந்த் ரூ.16 கோடியே 74 லட்சத்து 90 ஆயிரத்து 596-ம், சங்கீதா ரூ.69 லட்சத்து 54 ஆயிரத்து, 438-ம், செந்தாமரை ரூ.32 லட்சத்து 24 ஆயிரத்து 035-ம் இருப்பு வைத்துள்ளனர்.
கதிர் ஆனந்திடம் 3,664 கிராம் தங்கம், 3 காரட் வைரம், 31 கிலோ 702 கிராம் வெள்ளியும், சங்கீதாவிடம் 1,003 கிராம் தங்கம், 1½ காரட் வைரம், 10.868 கிராம் வெள்ளியும், செந்தாமரையிடம் 975 கிராம் தங்க நகைகள் உள்ளன. கதிர்ஆனந்திடம் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், டிராக்டர் உள்பட 12 வாகனங்களும், சங்கீதாவிடம் 3 வாகனங்களும் காணப்படுகின்றன.
பல்வேறு வங்கிக்கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை, வைப்புத்தொகை, பங்கு முதலீடு என்று அசையும் சொத்துகளாக கதிர் ஆனந்திடம் ரூ.32 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரத்து 392-ம், சங்கீதாவிடம் ரூ.7 கோடியே 40 லட்சத்து 26 ஆயிரத்து 873-ம், செந்தாமரையிடம் ரூ.87 லட்சத்து 70 ஆயிரமும் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் சென்னை, வேலூர், காட்பாடி, ஈரோடு, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகம், ஏலகிரி உள்பட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று கதிர் ஆனந்த் பெயரில் அசையா சொத்து ரூ.35 கோடியே 81 லட்சமும், சங்கீதா பெயரில் ரூ.35 கோடியே 34 லட்சமும், செந்தாமரை பெயரில் ரூ.97 லட்சத்து 86 ஆயிரமும் உள்ளன. கதிர்ஆனந்துக்கு ரூ.6½ கோடியும், சங்கீதாவிற்கு ரூ.43 கோடியே 48 லட்சமும், செந்தாமரைக்கு ரூ.1 கோடியே 17 ஆயிரமும் கடன் உள்ளன.
ஏ.சி சண்முகம்:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் வருமாறு:-
ஏ.சி.சண்முகம் மனைவி பெயர் லலிதா லட்சுமி. ஏ.சி.சண்முகம் கையிருப்பு தொகையாக ரூ.55 ஆயிரத்து 601-ம், லலிதா லட்சுமியிடம் ரூ.85 ஆயிரத்து 480-ம் உள்ளது. வங்கிக்கணக்குகளில் ஏ.சி.சண்முகம் ரூ.94 லட்சத்து 64 ஆயிரத்து 043-ம், லலிதா லட்சுமி ரூ.1 கோடியே 17 லட்சத்து 01 ஆயிரத்து 780-ம் இருப்பு வைத்துள்ளனர். ஏ.சி.சண்முகத்திடம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளியும், லலிதா லட்சுமியிடம் 3,837 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளியும் உள்ளன.
பல்வேறு வங்கிக்கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை, வைப்புத்தொகை, பங்கு முதலீடு, நகை என்று அசையும் சொத்துகளாக ஏ.சி.சண்முகத்திடம் ரூ.36 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 921-ம், லலிதா லட்சுமியிடம் ரூ.37 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 259-ம் உள்ளன.
வேலூர், ஆரணி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நிலங்கள், காலிமனைகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று ஏ.சி.சண்முகம் பெயரில் அசையா சொத்து ரூ.7 கோடியே 43 லட்சமும், லலிதா லட்சுமி பெயரில் ரூ.16 கோடியே 2 லட்சமும் உள்ளன. ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.17 கோடியே 72 லட்சமும், லலிதா லட்சுமிக்கு ரூ.11 கோடியே 12 லட்சமும் கடன் உள்ளன.